ஒரு குழந்தையிடம் இரண்டு ஆப்பிள்கள் இருந்தன. அந்தக் குழந்தை மிகுந்த உற்சாகத்தோடு இரண்டு ஆப்பிள்களையும் கையில் எடுத்தது. அப்போது அதன் அருகில் வந்த அக்குழந்தையின் தாய், "எனக்கு ஒரு ஆப்பிள் தருவாயா"? என்று கேட்டாள். உடனே அக்குழந்தை ஒரு ஆப்பிளை கடித்தது. அதைக் கண்ட தாய் கடித்த ஆப்பிளை அந்த குழந்தை வைத்துக் கொள்ளும். கடிக்காத மற்றொரு ஆப்பிளை தனக்கு கொடுக்கும் என்று நினைத்தாள். ஆனால் அடுத்த நிமிடம் அந்த குழந்தை அடுத்த ஆப்பிளையும் கடித்தது. அப்பொழுது அந்தத் தாய்க்கு மிகுந்த வருத்தம் உண்டாகியது. தனது குழந்தை தனக்கு எந்த ஒரு ஆப்பிளையுமே தரவில்லை என்று நினைத்தபோது மனம் வேதனைப்பட்டது. இவ்வாறு அவர் வேதனையோடு சிந்தித்துக் கொண்டிருக்கையில் அக்குழந்தை தாயிடம் ஒரு ஆப்பிளை கொடுத்து, " அம்மா இதுதான் மிகவும் சுவையாக உள்ளது. இதை சாப்பிடுங்கள்" என்று கூறியது.
ஆம் அன்புக்குரியவர்களே நலமானவை அனைத்தும், சிறந்த கொடைகள் எல்லாம் கடவுளிடமிருந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் கடவுளிடமிருந்து மேலான அருள் கொடைகளை பெற்றுக் கொள்கின்ற நாம் அவருக்கு நன்றியுடன் வாழ அழைக்கப்படுகிறோம்.
மனித பலவீனங்களும் மனச்சோர்வுகளும் நமது வாழ்க்கையில் குறுக்கீடு செய்தாலும் கடவுளின் அணைகடந்த அருள்செல்வம் நம் மீது பொங்கி வழிகின்றது. இதனையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம்.
பாவியான அந்தப்பெண்ணை ஆண்டவர் இயேசு அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார். அவளின் பாவங்களை மன்னித்து அவளுக்கு விடுதலை வாழ்வு வழங்குகின்றார். நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்களில் எல்லாம் நமது நிலை என்ன? என்பதை உணர்ந்துகொண்டு அந்த நிலையில் இறைவனுக்கு ஏற்ற முறையில் அவர் விரும்பும் அன்பு மகளாக, அன்பு மகனாக நமது வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.
அன்று ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஏமாற்றியது போல சாத்தான் இன்றும் தனது மாய கவர்ச்சிகளால் நம்மை ஈர்க்க வலம் வந்துகொண்டு இருக்கிறான். ஆனால் பாவம் பெருகும் இடத்திலும் இறையருள் பொங்கி வழிகின்றது என்பதை உணர்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் நாம் உபசரிப்பு என்ற ஒன்றையும் கற்றுக் கொள்ள இயலும். வந்தாரை வரவேற்பது தமிழரின் பண்பாடு என மார்தட்டிக் கூறக்கூடிய நாம் இன்று நமது குடும்பங்களில் உபசரிப்புகள் எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவும் பாவியான அப்பெண்ணின் உபசரிப்பை மிகைப்படுத்தி பேசுகின்றார். முன்னொரு காலத்தில் எல்லாம் வழிப்போக்கர்கள் வந்து தங்கி செல்வதற்காக வீட்டிற்கு முன்பு திண்ணை வைத்து வீடு கட்டிய காலம் இருந்தது. ஆனால் இன்று வீட்டிற்கு முன்னால் நாய்கள் ஜாக்கிரதை என எழுதி போடப்பட்டும், இங்கு கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது என எழுதப்பட்ட வாசகங்கள் தான் இன்று உபசரிப்பு பலகைகளாக வீட்டுக்கு முன் இருக்கின்றன. இச்சூழலில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமது மனங்களில் நாம் அடுத்தவரை எவ்வாறு உபசரித்து வரவேற்கிறோம் என்பதை இந்த பாவியான பெண்ணின் செய்கையை சுட்டிக்காட்டி இயேசு நமக்கு விளக்குகிறார். அதேசமயம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கும் பாவியான பெண் தனது பாவத்திற்கு மனம் வருந்தி பரிகாரம் செய்வதையும் இறைவன் சுட்டிக்காட்டுகிறார். நாமும் நமது வாழ்வில் அடுத்தவரை இன்முகத்தோடு உபசரிக்கவும் தவறுகளுக்காக மனம் வருந்தி இறையருளை பெற்றுக்கொள்ளவும் முயன்று இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக வளர்வோம்.
"எண்ணிய முடிதல் வேண்டும்.
நல்லவே எண்ணல் வேண்டும்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல் அறிவு வேண்டும் ".
என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப அடுத்தவரை உபசரிப்பதில் தவறுகளை ஏற்றுக்கொண்டு மனம் வருவதிலும் உறுதியாக இருந்து நல்லெண்ணத்தோடு இச்சமூகத்தில் வளர இறை அருளை வேண்டியவர்களாய் தொடர்ந்து நல்லெண்ணம் கொண்டவர்களாய் நன்றாக உபசரிக்க கூடியவர்களாய் இச்சமூகத்தில் இயேசு காட்டிய பாதையில் பயணம் செய்வோம்.
Superb bro.. 👏👏👍
பதிலளிநீக்கு