இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் வழியாக இறைவன் நாம் நமது பகைவரை அன்பு செய்ய அழைப்பு விடுக்கின்றார்.
பகைவரை அன்பு செய்வது என்பது சாத்தியமா? என்ற எண்ணம் உள்ளத்தில் எழலாம். ஆனால் உண்மையான கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் மன்னிப்பை தங்களின் மணிமுடியாக கொண்டு இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நாம் பின்பற்றக் கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை சிலுவை மரணத்திற்கு உள்ளாக்கியவர்களை உயிர் இழக்கும் நேரத்திலும் கூட மன்னித்து உயிர் துறந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று அவரைப் பின்தொடருகிறோம் எனச் சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவரும் பெயரளவில் பகைவனை மன்னிக்க வேண்டும் எனக் கூறுவதை விட தங்களின் செயல்களின் அதை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு இன்றைய நாள் வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார்.
மன்னிப்பு என்பது நாம் பிறருக்கு செய்யும் மகத்தான காரியம் அல்ல, மாறாக நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு மகத்தான காரியமாகும். நமக்கு எதிராக ஒருவர் குற்றம் இழைக்கும் போது அவரை மன்னிக்காது இருக்கும்போது நாம் நமக்கு நாமே அமைதியை இழந்தவர்களாக இருக்கின்றோம். பகைவரை அன்பு செய் என்பது சொல்வதற்கு நன்றாக இருக்கும். ஆனால் செயலில் வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் அதனை நாம் செயலாக்கப்படுத்தும் பொழுது நாம் உண்மை கிறிஸ்தவர்களாக அதாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக நாம் மாறுகிறோம். உண்மையில் அவ்வாறு நாம் நமது பகைவர்களை மன்னிக்கும் பொழுது, நமது மனமானது அமைதி நிலையை அடைகிறது என்பது முற்றிலும் உண்மை.
மற்றவர்களை மன்னிக்க மறுக்கும் மனிதன் தன் கடந்து செல்ல வேண்டிய பாதையை தானே உடைக்கின்ற மூடனுக்கு ஒப்பாவான் என்கின்றார். ஜார்ஜ் ஹெர்பெர்ட்
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இரண்டு, மூன்று நபர்கள் இணைந்து இருக்கும் பொழுது கண்டிப்பாக தங்களுள் யார் பெரியவர்? என்ற எண்ணம் எழலாம். அந்த எண்ணத்தின் அடிப்படையில் நமது அருகில் இருக்கக்கூடியவர்களின் மீது நாமே பல நேரங்களில் தவறான கருத்துக்களை, நமது முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்கின்றோம். மேலும் அடுத்தவரை பற்றி பல நேரங்களில் தவறான செயல்களை மிகைப்படுத்தி கூறுகின்றோம். இதன் விளைவாக இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய உறவில் விரிசல் என்பது ஏற்படுகிறது. வாழ்வில் விரிசல்கள் உருவாகும் பொழுது நண்பர்களும் எதிரிகளாக மாறுகின்றார்கள். ஏன் குடும்பத்திலும் கூட கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தான் என்ற மனப்பான்மையின் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவ்வேறுபாடுகள் பல நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்வதற்கும், உறவில் விரிசலை உருவாக்குவதற்கும் வழிவகுக்கின்றன. ஆனால் மகிழ்ச்சியான திருமண வாழ்வு என்பது இரு மன்னிக்கத் தெரிந்த உள்ளங்களின் சங்கமும் என ராபர்ட் குயல்லென் கூறுகிறார்.
உண்மையில் மன்னிக்கத் தெரிந்த மனங்கள் இணைந்து இருக்கும் பொழுது வாழ்வில் மகிழ்ச்சி எப்போதும் அவர்களிடையே நிலையாக உள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்தவர்களாக இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பகைவரை அன்பு செய் என்று கூறக்கூடிய வார்த்தைகளின் அடிப்படையில், நமது வாழ்வில் நாம் வெறுக்கக்கூடிய நபர்களை நேசிக்கவும், அவர்களோடு உறவை வளர்த்துக்கொள்ளவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று செயல்படுவோம்.
"மன்னிக்கத் தெரிந்தவர்களே மாமனிதர்கள்".
Well done! Great!
பதிலளிநீக்கு