ஒரு அரசன் ஒருவன் தன் அமைச்சரிடம் யார் இந்த இயேசு கிறிஸ்து? இவரை ஏன் மற்றவர்களின் பாவங்களுக்காக மனிதனாக பிறந்து ரத்தம் சிந்தி அவமானப்பட்டு மரிக்க வேண்டும்? என்று கேட்டார்.
மற்றவர்களின் பாவங்களை நீக்க வேண்டும் , அவர்களை அன்போடு வாழ வைக்க வேண்டும், எவ்வாறு வாழ வேண்டுமென்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காகவே அவர் இந்த மண்ணுலகில் பிறந்து பாடுகள் பட்டு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார்.
ஒரு மனிதன் நல்லவிதமாக வாழ இன்னொரு மனிதனை சொல்லி கொடுக்கலாமே மனிதர்களை போதுமே. இதற்காக ஏன் கடவுள் வரவேண்டும் என்று அரசர் அமைச்சரிடம் கேட்டார்.
ஒருநாள் அரசரும் அமைச்சரும் ஒரு நதிக் கரையில் இருந்து இன்னொரு நதிக்கரைக்கு பயணப்பட்டனர். அப்போது அங்கு கையில் ஒரு குழந்தையுடன் வந்த அமைச்சர் அரசரே உம் குழந்தையாகிய இந்த குட்டி இளவரசன் அழுதுகொண்டிருந்தான். தானும் வருவதாக அந்த குழந்தை அடம் பிடித்ததால் அந்த குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாக அமைச்சர் கூறுகிறார். இருவரும் அந்த ஒரு குழந்தையுடன் படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அமைச்சரின் கையிலிருந்த குழந்தை தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. உடனே அரசர் நீருக்குள் குதித்து அந்த குழந்தையை வெளியே எடுத்தபோது அது ஒரு பொம்மையாக காணப்பட்டது
நீ ஏன் இவ்வாறு செய்தாய் என்று கோபமாக அரசர் அமைச்சரைப் பார்த்து கேட்டார். அப்பொழுதுதான் அமைச்சர் அரசரைப் பார்த்து கேட்கின்றார், குழந்தை நீருக்குள் விழுந்த போது படைவீரர்களுள் ஒரு சிறந்த படை வீரரை அனுப்பி உங்களது குழந்தையை மீட்டு இருக்கலாமே, நீங்கள் ஏன் நீருக்குள் குதித்தீர்கள் என்று அமைச்சர் கேட்டார்! அப்போது மன்னன் அந்தக்குழந்தை என்னுடைய குழந்தை. எனது குழந்தையை காப்பாற்ற உடனே நீருக்குள் குதித்தேன். என் மகனைக் காப்பாற்றினேன் என்று கூறுகிறார். அப்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். இதுபோல் தான் கடவுளுக்கு நாம் அனைவருமே குழந்தைகள். அனைவரையும் கடவுளின் குழந்தைகளாக பாவிக்கிறார். அவரே இவ்வுலகில் மனிதனாக பிறந்து நமக்கு மீட்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். நாம் பிறரை மன்னிக்கவும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் நம்மில் செயல்படுகின்றார்.
மன்னிப்பின் அடையாளம் மாபரன் இயேசு கிறிஸ்து. சிலுவையில் தொங்கி உயிர்விடும் நிலையிலும் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மன்னித்து சென்றார். மன்னிப்பின் நாயகன் . இந்த நாயகன் இன்றைய நாளில் நற்செய்தி வாசகங்கள் வழியாக நம்மை அழைப்பதும் மன்னிக்கவே .
நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நம்மோடு வாழ்ந்த ஒருவரான அருட்சகோதரி ராணி மரியா மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் எளிய மக்களின் வாழ்வை உயர்த்திட அவர்களிடையே சுய உதவி குழுக்கள் ஆரம்பித்து அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். இதனைக் கண்ணுற்ற வட்டிக்கு பணம் கொடுக்கின்ற நபர்கள் அருட்சகோதரி ராணி மரியாவை ஒழிக்க நினைத்தார்கள். எனவே அருட்சகோதரி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வெளியே தள்ளப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இவ்வாறாக தனது மகளின் இழப்பையும் கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சம்பந்தர் சிங் என்பவனை ராணி மரியாவின் தாயும் சகோதரியும் சந்தித்து அவனையும் மன்னித்ததால் அவன் விடுதலை பெற்றான். அவன் தொடர்ந்து ஆண்டவரின் பணியை செய்து கொண்டிருக்கிறான்.
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
என்று திருக்குறள் கற்பிக்கிறது.
பூமியானது தன்னை காலால் மிதித்தவர்களையும் சுமந்து கொண்டுதான் இருக்கிறது.
மனித மனங்கள் இன்று கலங்குவது அணுகுண்டுகளால் அல்ல,மாறாக, அன்பற்ற வார்த்தைகளால்.
இன்றைக்கு நாம் வாழும் இந்த உலகத்தில் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவரை காயப்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் பல நேரங்களில் பல வழிகளில் காயப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று மற்றவரை மன்னிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் வழியாக இறைவன் நம்மிடையே பகைமை உணர்வு சினம் பழிவாங்க கூடிய எண்ணம் கோபம் இருக்கக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட தலைவர் தன் பணியாளரை மன்னிக்கின்றார். அவனுடைய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்கின்றார். ஆனால் மன்னிப்பு பெற்ற அந்தப் பணியாள் தன்னுடைய உடன் பணியாளை மன்னிக்க மறுக்கிறான். எனவே தலைவர் அந்த மன்னிக்க மறுத்த பணியாளுக்கு தண்டனை வழங்குகிறார். மன்னிப்பு பெறக்கூடிய ஒவ்வொருவரும் மன்னிப்பு வழங்க வேண்டும்.தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் இறைவன் மன்னித்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் நாம் நமக்கு எதிராக செயல்படக் கூடியவர்களின் தவறை மன்னிக்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நம்முன் எழுப்புவோம்.
குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பல வகைகளில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், இன்றும் பேசிக் கொள்ளாத குடும்பங்கள் ஏராளமாக இருந்துகொண்டே இருக்கிறன. பெற்றோர் பிள்ளைகளுடன் பேசிக் கொள்ளாத நிலை நீடிக்கிறன.
ஆனால் இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து அடுத்தவர் நமக்கு எதிராக செய்த குற்றங்களை மன்னிக்க அழைப்பு விடுக்கிறார். பேதுருவிடம் ஏழு முறை அல்ல 70 முறை மன்னியுங்கள் என்று கூறி இயேசு கிறிஸ்து இன்று நம்மையும் ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை முடிந்தவரை மன்னித்துக் கொண்டே இருக்க அழைப்பு விடுக்கிறார். மன்னிக்கக் கூடிய ஒவ்வொருவரும் மன்னிப்பு பெறுகிறார். நாம் ஒவ்வொரு நாளும் விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே இந்த செபத்தை சொல்லுகிறோம். பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்று ஜெபிக்கிறோம். நாம் பிறரை மன்னிப்பது போல் தான் இறைவனும் நம்மை மன்னிப்பார். இந்த உலகத்தில் குற்றங்களிலிருந்து விடுபட வேண்டும் பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என முற்படுவோமாயின் இறைவன் நமக்கு கொடுத்த, கொடுக்கக்கூடிய ஒரே ஒரு வாய்ப்பு நமக்கு எதிராக பாவம் செய்தவரை மன்னிப்பது. பிறரை மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறோம், நாம் பிறரை மன்னிக்கும் பொழுது இறைவன் கண்டிப்பாக நம்மை நம் பாவங்களை மன்னிப்பார்.
இன்றைய வாசகத்தின் வழியாக நமது வாழ்விலும் நாம் மன்னிப்பை பிறருக்கு வழங்கவும், நாமும் மன்னிப்பு பெறவும் மன்னித்து மறந்து அவர்களோடு பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாமும் மன்னிப்பு என்னும் மகத்துவம் நிறைந்த பரிசை மற்றவர்களுக்கு கொடுப்போம். வாழ்வில் தெளிவு பெறுவோம். அனைவருடனும் அன்போடு வாழ்வோம்.
ஆங்கில Sorry-ஐ விட தமிழ் "மன்னிப்பு"-க்கு உயிரும் அதிகம்.. வலியும் அதிகம்...
பதிலளிநீக்குஅருமையான பதிவு சகோ..👍