விளக்கேற்றும் தீப்பொறியாய் இருப்போம்..."
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் எங்கும் இரத்தக்கறைகள் காரணம் ஒருவர் ஒருவர் மீது கொண்ட பகை உணர்வு. முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட அவமானத்தை அசை போட்டுக்கொண்டிருந்த ஜெர்மனியின் பழிவாங்கும் உணர்வின் உச்சமே இரண்டாம் உலகப் போர் வெடிக்க காரணமானது. வன்முறையை வன்முறையால் அழிக்க முடியாது என்பதை உணர்த்து கொள்ள முயலுவோம். ஒருவனுக்கு பழிக்குப்பழி உடனடி நிவாரணம் என்ன தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வாகாது. ஒருவன் பழிவாங்கும் இடத்தில் இருந்துகொண்டு மன்னிப்பவன் பெயர்தான் மாமனிதன் என்பார்கள்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நம்மை மாமனிதர்களாக மாறிட அழைப்பு தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியா இறைவாக்கினரை ஆண்டவர் மக்களின் தீய செயல்களை சுட்டிக்காட்டி, அவர்கள் அவ்வழியில் இருந்து திரும்ப வேண்டும் என எச்சரிக்க பணிகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒருவர் நமக்கெதிராக தவறு செய்யும்பொழுது அவர் தனிமையில் இருக்கும் பொழுது அவரது தவறை சுட்டிக்காட்ட இயேசு கூறுகின்றார். அவர் அதை ஏற்க மறுக்கும் பொழுது 2, 3 சாட்சிகளோடு அவர்களை சுட்டிக்காட்ட குறிப்பிடுகின்றார். அதையும் அவர்கள் ஏற்று தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் திரு அவையிடம் முறையிடுங்கள் எனக் குறிப்பிடுகின்றார். இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் தவறுகளைப் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம். தவறு செய்தவர்களை பழிவாங்க அல்ல. ஆனால் இன்று நம்மில் பலர் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழமைவாத சிந்தனைகளின் அடிப்படையில் பழி வாங்குவதை தங்களின் செயலாகக் கொண்டுள்ளனர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தவறுகளை சுட்டிக்காட்ட நம்மை அழைக்கின்றார். தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருப்பதும் தவறாகும். தவறுகளை சுட்டிக் காட்டுவதன் நோக்கம், அவர்களை பழிவாங்குவது அல்ல, மாறாக அவர்களை கடவுளின் பாதையில் சரியான பாதையில் அழைத்துச் செல்வதற்காக என்ற அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார். நாம் செலுத்த வேண்டிய ஒரே கடன் அன்பு மட்டுமே என்கின்றார்.
ஒருமுறை காந்தியின் செயல்பாடுகளை கண்டித்து ஒருவர் பல பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட காந்தியடிகள் அதை அமைதியாக அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார். அந்த கடிதத்தில் காந்தியின் தலைமுறையில் உள்ள அனைவர் பற்றியும் மிகவும் தவறுதலாக மிகைப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. ஆனால் காந்தியடிகள் அந்தக் கடிதத்தை முழுவதையும் பொறுமையாக படித்து விட்டு, அந்த கடிதத்தில் இருந்த குண்டூசியை எடுத்து தனது மேஜையின் மீது வைத்துக்கொண்டு, இது மட்டுமே எனக்கு தேவை படக்கூடியதாக உள்ளது என்று கூறிவிட்டு அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றார். இது போன்ற ஒரு நிகழ்வு நமக்கு ஏற்பட்டிருக்கும் போது நம்மில் பலர் பெரும்பாலும் இந்த கடிதத்தை எழுதியது யாராக இருப்பார்கள்? என்ற சிந்தனையிலேயே பல மணி நேரத்தை, பல நாட்களை செலவழித்து இருப்போம்.
இன்று நாம் வாழக்கூடிய இச்சமூகத்தில் தவறுகள் நடக்கும் பொழுது, அதை தவறு என சுட்டிக்காட்ட நாம் அனைவரும் முயல வேண்டும். ஆனால் அச்செயலை செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இச்செயலில் நாம் ஈடுபட கூடாது. பழிவாங்குதல் ஒரு முடிவல்ல அது ஒரு முடிவின் தொடக்கம்.
"எனக்கு ஏற்பட்ட அவமானங்களை சேர்த்து வைத்துள்ளேன் பழிவாங்க அல்ல மறந்தும் கூட மற்றவர்களுக்கு அதை செய்யக்கூடாது என்பதற்காக.." என்றார் சார்லிசாப்ளின் அவர்கள்.
"பழி தீர்ப்பதை விட பொறுமையே நல்லது" என்கிறது குரான் 10: 126
இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு தரக்கூடிய செய்தியும் இதுவே. தவறு இழைத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். ஆனால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, அன்பின் அடிப்படையில் அது அமைய வேண்டும் என்பதாகும்.
நமது வாழ்வில் நாம் குற்றம்சாட்டிய செயல்கள் அனைத்தும் எந்த எண்ணத்தில் எழுந்தது என சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை அவைகள் சுயநல போக்கோடு, பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உதயமாகி இருக்குமாயின், இன்றைய நாள் முதல் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது செயல்களை சரி செய்துகொண்டு, அன்பின் அடிப்படையில் மனமாற்றத்தை மையமாகக்கொண்டு, தவறுகளைச் சுட்டிக்காட்டி, தவறிழைத்தவர்கள் தங்கள் வாழ்வை சரிசெய்துகொள்ள அவர்களுக்கு இயேசுவின் சீடர்களாக நாம் துணை நிற்க முயலுவோம்.
"அன்பின் அடிப்படையில் நமது செயல்கள் அமையட்டும் ..."
பழிவாங்குதல் ஒரு முடிவு அல்ல அது ஒரு முடிவின் தொடக்கம் என்ற கருத்து நாம் ஒவ்வொருவரும் நமது கோபத்தின் நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டிய அருமையான வார்த்தைகள்! நன்றி!
பதிலளிநீக்கு