சனி, 26 செப்டம்பர், 2020

நீங்கள் நதியா? தேங்கிய குட்டையா? (27.09.2020)


நாம் வாழும் இந்த பூமி
நலமாகிட வேண்டாமா!
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி
நின்று நிலைத்திட வேண்டாமா!
இயேசுவே காட்டிய வழி உண்டு!
இயங்கிட நமக்கு ஒரு நெறி உண்டு!
               
                 என்று இந்த பூமியில் நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்வதன் வழியாக நீதியும் சமத்துவமும் செயலாக்கம் பெற நலிவுற்றவரின் வாழ்வு நலம் பெற இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
 
                      
          வண்ணங்கள் ஒழுங்காய் சேர்ந்தால்தான் வானவில்.
         எண்ணங்கள் ஒழுங்காய் சேர்ந்தால் தான் வாழ்க்கை.

                இன்றைய முதல் வாசகத்தில் தங்களது விருப்பத்தின்படி வாழ்ந்துவிட்டு தலைவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறுபவர்களின் சுயநலப் போக்கை ஆண்டவர் கண்டிக்கின்றார். ‌நேர்மையாளர் தனது நேர்மைத்தனத்தை விட்டு விலகி இருப்பதும், தவறு இழைப்போர் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் அவைகளை விட்டு விலகாமல் இருப்பதும் பாவம் என்கிறார்.
            ஆனால் தம்மைத் திருத்திக் கொண்டு சரியான நேரத்தில் சரியான காரியங்களைசெய்வோர் சிறப்பாக வாழ்வர் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் உரைக்கிறார்.
           
            இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என்று கூறும் புனித பவுலடியார் தூய ஆவியாரின் வரங்களையும் கனிகளையும் நம்மில் நிறைவாக்கிட, அன்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்திட அழைக்கின்றார்.
             எல்லோருக்கும் எல்லாமுமாய் வாழ்ந்த கிறிஸ்து "எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று கூறும் இறையாட்சியின் விழுமியங்களை நமது சமத்துவ உறவின் வழியாக வளர்த்திட அழைக்கின்றார்.

                       
                   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு வித உவமைகளை பற்றி இயேசு குறிப்பிடுகின்றார். தந்தை பணி செய்ய அழைத்தபோது தன்னால் முடியாது என்று மறுத்த மூத்த மகன் மனம் மாறி மீண்டும் சென்று பணியைச் செய்து முடிக்கின்றான்.

 ஆனால் இளைய மகனும் தந்தை அழைத்த போது உதவி செய்வதாகக் கூறுகிறான். ஆனால் அவன் செல்லாமல் அப்படியே இருந்து விடுகிறான்.
               மழை நீரால் இணைந்து ஓடுகின்ற நதியின் பயணத்தில் இடையிடையே குப்பைகள் வந்தாலும் தன்னுடைய பயண ஓட்டத்தில்
குப்பைகளையும் இழுத்துச்சென்று ஓரம்கட்டிவிட்டு, தொடர்கின்ற தனது பயணத்தில் தெளிவான தனது இலக்கில் தெளிந்த நீராக ஓடி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்க்கிறது. 
குப்பைகளால் தடுத்து நிறுத்த படுகின்ற நதி தனது பாதைகளை மாற்றிச் செல்வது போல நாமும் அன்பினால் தந்தையின் விருப்பத்திற்கு செவி கொடுக்காத  தன்னுடைய எதிர்மறை எண்ணங்களையும், வீண்பெருமையையும் விவாதங்களையும் ஓரம்கட்டிவிட்டு கிறிஸ்துவின் உண்மை சீடனாக அவரது பணி செய்ய தொடர்ந்து ஓடுகிறான்.

              ஆனால் குட்டையில் விழுகின்ற முதல் மழைத்துளி தூய்மையானதாக இருந்தாலும் அது தனது அடுத்த நிலைக்கு கடந்து செல்லாமல் அந்த குட்டையிலேயே தங்கிவிடுவதால் புழு பூச்சிகள் உருவாகும் தூய்மையற்ற நீராக மாறி விடுகின்றது. இவ்வாறு தேங்கிய குட்டை தன்னிலையிலிருந்து மாறிவிடும் பொழுது அதனால் அந்த குட்டைக்கும் பயனில்லை. அதனை சுற்றி வாழ்கின்றவர்களுக்கும் பயனில்லை.

இன்றைய நாளில் நமது வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் நதிகள் தன் பாதையை மாற்றி இலக்கை நோக்கி பயணித்து கடலோடு சங்கமிப்பதுபோல செல்லும் வழி எங்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நதியைப் போல வாழ கற்றுக் கொள்கிறோமா?

           அல்லது தேங்கிய குட்டை போன்று தீமைக்கு மேல் தீமை செய்து நமது எதிர்மறை எண்ணங்களால் நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறோமா?

         நதி போன்று நன்மைகள் செய்வதில் நாம் கருத்தாய் இருந்தால், அதில் நம்மைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்வோம்.
    
                 தேங்கிய குட்டை போன்ற எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தால், நம்மை மாற்றிக் கொண்டு நலமாய் வாழ, பிறரையும் வாழ வைக்க உறுதி கொள்வோம்!
       
              இன்றைய நாளில் நமது பாதைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு நமது இறையாட்சி பயணத்தை தொடருவோம்!

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...