புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்கள் ஒருவராகவும், இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். கத்தோலிக்க திருஅவை கிழக்கு மரபுவழி திருஅவை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
சமூகத்தால் பாவி என அடையாளம் காட்டப்பட்ட இந்த நபரை இயேசு தன் பணிக்கு அழைப்பதைதான் இன்றைய நாளில் நாம் நற்செய்தி வாசகத்தின் வழியாக வாசிக்க கேட்கின்றோம்.
கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது அவர் நமக்காக 99 அடிகள் எடுத்து வைப்பார் என கூறுவார்கள். சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு நபரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து தேடிச் செல்கிறார். அவரை தன் பணிக்கு அழைக்கிறார். ஆண்டவரின் அழைப்பை கேட்ட மத்தேயு, தன் பணிகளை விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவை பின் தொடர்கிறார் .
நம் உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பி பார்ப்போம் இப்போது இறைவன் நம் முன் வந்து நீ செய்யும் அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு என் பின்னே வா என்றால் எத்தனை பேர் அவர் பின்னே செல்ல தயாராக இருக்கின்றோம்?.
இந்த கேள்விக்கு நம்மில் பலர் சொல்லக்கூடிய பதில் நான் தயாராக இருக்கிறேன் என்பதுதான். ஆனால் உண்மையில் நமது வார்த்தைகளை நம்மால் செயல்வடிவமாக்க முடியுமா? என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
மத்தேயுவை இயேசு அழைத்தது தன் பணிக்கு. இயேசுவின் பணி என்ன? என்ற கேள்வி எழுப்பினோம் என்றால். அன்றைய யூத சமூகத்தில் சட்டத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டிருந்த மக்களுக்கு தெளிவை வழங்குவதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணியின் முதன்மையாக வைத்திருந்தார். இறைவனின் அரசாகிய இறையரசை இம்மண்ணில் விதைத்திட மனிதனை மனிதன் மதித்து வாழ்ந்திட இயேசு மனிதனாக இவ்வுலகிற்கு வந்து மனிதனின் நலனுக்காக நலமான வற்றை செய்ததன் விளைவாக மரணத்தை ஏற்கும் நிலை உருவானது. இதுவே இயேசுவின் பணி இந்தப் பணியைச் செய்யவே அவர் அன்று மத்தேயு வையும் அழைத்தார் என்று நம்மையும் அழைக்கின்றார். உண்மையில் நாம் அனைவரும் செல்ல தயாரா? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி பார்ப்போம்.
இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை எதிர்த்து எத்தனையோ நபர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். பலர் உரிமைக்காகவும், நீதிக்காகவும் மண்ணுலகில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய சூழல் அனுதினமும் எங்கு அதிகரித்து வருகிறது. இவர்களோடு இணைந்து சமூகத்தின் நீதிக்காகவும், உண்மை காகவும், துன்புறுவோரின் துயர் துடைக்கவும் நாம் அனைவரும் இயேசு செய்த பணியை செய்ய அழைக்கப்படுகிறோம்.
அழைத்த இயேசுவின் வார்த்தை களுக்கு தன்னை முழுமையாக கையளித்து இயேசுவைப் பின்தொடர்ந்த மத்தேயு தன் வாழ்வின் இறுதிவரை அவரது பணியில் நிலைத்திருந்தார். எனவேதான் ஆண்டுகள் பல கடந்தாலும் அகில உலக திருஅவை இன்று அவரை நன்றியோடு நினைவு கூறுகிறது. இயேசுவைப் பின்பற்றுகிறோம், நாங்களும் இயேசுவின் சீடர்கள், இயேசு கற்பித்த மதிப்பீடுகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியவர்கள் நாங்கள் என்ற மனநிலையோடு இச்சமூகத்தில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் அனைவரும் உண்மையில் மத்தேயுவைப் போல உண்மையான சீடர்களாக வாழுகின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்புவோம். புனித மத்தேயுவைப் போல இயேசுவின் உண்மைச் சீடராக நாமும் நமது வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க கூடியவர்களாக வாழ இறைவனது அருளை நாடி தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் பின் தொடர்வோம்.
நல்லதொரு சிந்தனை...
பதிலளிநீக்குஅருமை சகோ.. 👏👍