இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இயேசுவோடு இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் அவர் மீது குற்றம் சுமத்தி அவர் மீது கல்லெறிய முயலுவதைத் தான் இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் வாசிக்கக் கேட்கிறோம்.
இது போன்ற ஒரு நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் நாம் வாசிக்க கேட்கிறோம். எரேமியா ஆண்டவரின் வார்த்தைகளை அனைவருக்கும் எடுத்துரைத்து, அவர்களின் தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வு நெறிப்படுவதற்கான வழிகளை காட்டி இருந்தாலும், அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி இந்த எரேமியாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு ஒன்று கூடியது போல, இயேசு செய்த அத்தனை அரும் அடையாளங்களையும் கண்டிருந்தாலும், அவர் சொன்ன நல்லவற்றை கேட்டிருந்தாலும், அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு கேட்பாரின் பேச்சை கேட்டுக்கொண்டு, பலர் யூதர்களின் சூழ்ச்சியால் அதிலும் குறிப்பாக பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்களுடைய சூழ்ச்சியால், இயேசுவின் செயல்களில் குற்றங்களை சுமத்தி, அவரை குற்றவாளியாக தீர்ப்பிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லெறிவதற்கு முயலுகிறார்கள், இயேசுவோடு உடன் இருந்தவர்கள். என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், என் செயல்களைக் கொண்டாவது என்னை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இயேசு அவர்களிடம் கூறிவிட்டு, அவர்கள் மத்தியில் இருந்து நகர்ந்து செல்லுகின்றார்.
இந்த இயேசுவைப் போல பல நேரங்களில் நாமும் சோதனைகளுக்கு உள்ளாகலாம். நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை பலர் கண்டிருந்தும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், நம்மிடம் இருக்கின்ற குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி, செய்யாத தவறினை இயேசுவின் மீது சுமத்தியது போல, நம்மீதும் பலவிதமான குற்றங்களை மட்டுமே சுமத்தி, நாம் செய்கின்ற நன்மைத்தனன்களை உதறித் தள்ளுகின்ற மனிதர்களை நம் வாழ்வில் நாமும் சந்திக்க நேரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்கிற போது கூட, ஆண்டவர் இயேசுவைப்போல அனைவரின் நலனுக்கானதை மட்டும் எடுத்துரைப்பவர்களாக அனைவரின் நலனை மையப்படுத்தி தன் வாழ்வையே இழந்த இயேசுவைப்போல, நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக