ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் குருத்து ஞாயிறை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கையில் ஏந்திய ஓலைகளோடு இயேசுவோடு இருந்தவர்கள் எருசலேம் நகர் நோக்கி அழைத்து வந்ததை நினைவு கூர்ந்து நாமும் இந்த குருத்தோலை பவனியில் இடம் பெறுகின்றோம். அன்று இயேசு செய்த அத்துனை அரும் செயல்களையும் கண்டு அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இவரே தங்களின் அரசராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் சுமந்தவர்களாக, கையில் பலவிதமான குருத்தோலைகளை வைத்துக்கொண்டு வெற்றி முழக்கத்தோடு ஓசன்னா கீதம் பாடி, ஆண்டவர் இயேசுவை எருசலேம் நகர் நோக்கி மக்கள் அழைத்து வந்தார்கள். இவர்களின் இச்செயல் யூதர்கள் சிலருக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் பலவிதமான கலக்கத்தை உருவாக்கியது. எங்கே இவரை அரசராக்கி விடுவார்களோ என்ற ஐய உணர்வின் காரணமாகத்தான் இயேசுவை பழிவாங்குவதற்கும் இயேசுவை அழிப்பதற்குமான வழியை அவர்கள் தேடத் தொடங்கினார்கள்.
ஆனால் கையில் குருத்தோலைகளை ஏந்தியவர்களாக, ஓசன்னா கீதம் பாடி, இந்த இயேசுவின் செயல்களை புகழ்ந்து அவரை அரசராக்க வேண்டும் என்று மனநிலையோடு எருசலேம் நோக்கி அழைத்து வந்தவர்கள் தான், இன்னும் சில நாட்களில் ஆண்டவர் இயேசுவே! ஒழியும்! என்று சொல்லக்கூடிய மனிதர்களாக மாறப்போகிறார்கள் என்பதையும் உணர்ந்தவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். தன் வாழ்வில் வந்த பாராட்டுகளையும் ஏற்றுக் கொண்டார்; இன்னல்களையும் ஏற்றுக் கொண்டார்; மற்றவர்களின் வசைப் பேச்சுக்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்தையும் அவர் ஏற்றுக் கொண்டதற்கான அடிப்படை, அவர் அனைவரும் மீதும் கொண்டிருந்த ஆழமான அன்பும் நட்புறவுமே. அந்த அன்பின் காரணமாகவும் நட்புறவின் காரணமாகவும் தான் இயேசு இந்த சமூகத்தில் எத்தனையோ நல்ல பணிகளை செய்து வந்தார். இப்பணிகளை செய்திருந்தாலும் கூட, தன்னை உணர்ந்து கொள்ளாத மக்கள், இன்று தன்னை உணர்ந்து கொண்டவர்கள் கூட நாளை தன்னை மறுதலிப்பார்கள் என்பதை உணர்ந்து இருந்தாலும் அவர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு காரியங்களை இயேசு செய்தார்.
இந்த இயேசுவை போலத் தான் நீங்களும் நானும் நன்மைகளை மட்டும் செய்கின்ற நபர்களாக, இச்சமூகத்தில் இருக்க வேண்டும் என்று அழைப்பை இதயத்தில் இருத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் செய்கின்ற காரியங்களை உணர்ந்து கொள்ளாதவர்களாக இருந்தாலும் சரி, உணர்ந்து கொண்டு நம்மை பாராட்டி விட்டு நாளை நம்மை தூற்றுகிறவர்களாக அவர்கள் மாறினாலும் சரி, நாம் நன்மைகளை மட்டும் செய்கிற நபர்களாக நாளும் இயேசுவைப்போல இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக