செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட... (31-7-22)

புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட... (31-7-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
குற்றமுள்ள நெஞ்சு குறுக்கும் என்பதற்கேற்ப, தான் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தக் கூடிய ஒரு நபராக நாம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையினை இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு வழங்குகின்றார். 

     இறைவாக்கினர் எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்கள் பல தவறான காரியங்கள் செய்ததை இறைவன் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் தங்களை குறை சொல்லுகின்ற, தங்களின் செயல்களை கண்டிக்கின்ற இந்த எரேமியாவை ஏற்று கொள்ளாத மனிதர்களாக இஸ்ரயேல் மக்கள் இருந்தார்கள். ஆனாலும் இறைவாக்கினர் எரேமியா,"நீங்கள் மனம் மாறி ஆண்டவரை நாடுகிற போது, அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் என்பதை வலியுறுத்தி மனமாற்றத்திற்கான விதையை தூவுவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, தான் கொலை செய்த யோவான் தான் மீண்டுமாக உயிர்த்து வந்து விட்டாரோ என ஏரோது இயேசுவைக் கண்டு கலங்குவதை நாம் வாசிக்க கேட்டோம் ‌.  

     இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, நமது வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை எல்லாம் நினைவு கூர்ந்து, மீண்டுமாக அத்தவறுகளை செய்யாமல், நம்மை நாமே சரிப்படுத்திக் கொண்டு, ஆண்டவர் நமக்கு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்வதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகின்றார். 

           நாம் செய்கின்ற செயல்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தவறான செயல்களுக்காக மனம் வருந்தி, இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுகிற போது, கடவுள் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள கூடியவராக இருக்கின்றார். இந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தீய வாழ்வை களைந்து, புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார். 

       இறைவனின் அழைப்பிற்கு திறந்த மனதோடு செவி கொடுத்து, அவரின் ஆசிகளை பெற்றுக் கொள்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...