வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

கிறிஸ்துவின் மனநிலை....(10-8-22)


கிறிஸ்துவின் மனநிலை....(10-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய முதல் வாசகத்தில் முகமலர்ச்சியோடு, இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொடுக்க அறிவுரை வழங்கப்படுகிறது.  நற்செய்தி வாசகத்தில் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது மற்றவருக்கு பயன் தராது என்பதை எடுத்துரைக்கிறது. இந்த இரண்டு வாசகங்களின் பின்னணியோடு இன்று திரு அவை நினைவு கூருகின்ற திருத்தொண்டர் புனித லாரன்ஸ் அவர்களின் வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

          திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவர் துடிப்புமிக்க இளைஞரான லாரன்ஸை அழைத்து வந்து திருத்தொண்டராக திருப்பொழிவு செய்து, இறை மக்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடலையும் திரு ரத்தத்தையும் வழங்குகின்ற பொறுப்பையும்,  திரு அவையின் சொத்துக்களை பராமரிக்கின்ற பொறுப்பையும் வழங்கினார். இந்த இரண்டு பணிகளையும் கடமையை உணர்ந்தவராய் சிறப்புடன் செய்தவர் தான் புனித திருத்தொண்டர் லாரன்ஸ் அவர்கள்.  இப்ப பணியை அவர் செய்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் கொடுங்கோல் அரசனான வலேரியன் என்பவன் திரு அவையின் சொத்துக்கள் அனைத்தையும் அடக்கி ஆள, கைப்பற்றி கொள்ள எண்ணினான். அதன் அடிப்படையில் அவன் திருத்தந்தை இரண்டாவது சிக்ஸ்துஸை கொலை செய்தான். அதனை தொடர்ந்து லாரன்ஸ் அவர்களை கொலை செய்ய முற்பட்டான். ஆனால் திருத்தொண்டர் லாரன்ஸ் அவர்களோ, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா விதமான திரு அவை சொத்துக்களையும் ஏழை எளியவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு, இவர்கள் தான் திரு அவையின் சொத்துக்கள் என மனிதர்களை, ஏழைகளை அரசனின் முன்பாக காண்பிக்க கூடியவராக இருந்தார். திருத்தொண்டர் லாரன்ஸ் இந்த செயலால் கோபமடைந்த அரசன் அவரை ஒரு கட்டிலில் படுக்க வைத்து கட்டிலுக்கு அடியில் தீயை மூட்டி துன்புறுத்தினான். துன்பத்திற்கு மத்தியிலும், ஒரு பாகம் வெந்துவிட்டது; என்னை திருப்பி போடுங்கள் மறுபகுதியும் வேகட்டும் என்று கூறக்கூடிய ஒரு மனிதனாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு, இருப்பதை முகமலர்ச்சியோடு அடுத்தவருக்கு பகிர்ந்து கொடுத்து, கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து ஆண்டவர் இயேசுவுக்காக, உயிரை தியாகம் செய்த இந்த லாரன்ஸை நினைவு கூருகின்ற இந்த நாளில், நாம் நமது வாழ்வை இந்த லாரன்ஸின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க அழைக்கப்படுகிறோம். 

        நாமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்ற பலவிதமான பணிகளை கடமையை உணர்ந்தவர்களாய், ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்ட மனிதர்களாக, திறம்பட செய்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...