அவரின் மக்களாக இன்றும் என்றும் எப்போதும் இருக்க ...
3-8-22
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக தவறிய வாழ்வில் இருந்து மனம் திரும்பிய இஸ்ரயேல் மக்களை கடவுள் பாதுகாப்பதாகவும், அவர்களை மீண்டும் நன்னிலைக்கு கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகளை வழங்குகின்றார். இந்த வாக்கு மாறாத கடவுளை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் உரியவராகவே யூதர்கள் கருதினார்கள். எனவே தான் அவர்கள் மற்றவர்களை புறவினத்தார் எனக்கூறி ஒதுக்கி வைத்துவிட்டு, கடவுள் தங்களுக்கானவர், மெசியா தங்களை மட்டுமே மீட்க வருவார் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
இவர்களின் மனநிலையை அறிந்தவராய் இயேசு அவர்களுக்கு வாழ்வுக்கான பாடத்தை கற்று தர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் கானானியப் பெண்ணின் வேண்டுதல்களுக்கு மௌனம் சாதித்தார். அப்பெண்ணிடத்தில் பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்கு போடுவது முறை அல்ல என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தியதன் பின்னணியும், தன்னை சுற்றி இருந்த மக்களுக்கு அனைவரும் கடவுளின் மக்கள், கடவுள் அனைவருக்குமானவர் என்பதை எடுத்துரைப்பதற்காகவே என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
நம் அனைவருக்குமான கடவுளிடம் நாம் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரது திட்டத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாய், நமது தீய வாழ்வில் இருந்து விடுபட்டு, கடவுள் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து, அவரின் மக்களாக இன்றும் என்றும் எப்போதும் இருக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக