வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, வாழ்வாக்க. 6-7-2022
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றப் பெருவிழாவை கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் தானியல் இறைவாக்கினர் தான் காட்சியில் கண்ட ஆண்டவரை குறித்து நம்மோடு பேசுவதை வாசிக்கக் கேட்டோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, நாங்கள் கற்பனை கதைகளால் புனையப்பட்ட இயேசுவைப் பற்றி பேசவில்லை, நாங்கள் உடனிருந்து தாபோர் மலையில் அவர் உருமாற்றம் அடைந்தபோது, "இவரே என் அன்பார்ந்த மகன்" என கடவுள் அவரை குறித்துக் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில், அவருடன் இருந்து, அவரது வார்த்தைகளை கேட்டு அதன்படி வாழ்வை அமைத்துக் கொண்ட நாங்கள் எங்கள் வாழ்வின் அடிப்படையில், நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களிடம் அறிவிக்கிறோம் எனக்கூறி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றத்தின் அடிப்படையில் உள்ள மாற்றம் அடைந்தவர்களாய் ஆணடவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, ஆண்டவர் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க துணிந்தார்கள் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற பெருவிழா, நமது உள்ளங்களை மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. நாம் நமது தீய வாழ்வை களைந்து, ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் அவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, அதை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக இச்சமூகத்தில் வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக