இணைந்து வாழ.... (12-8-22)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
மனிதன் இணைந்து வாழ்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறான். கணவன் மனைவி என்ற உறவாக இருந்தாலும் சரி, கடவுள் மனித உறவாக இருந்தாலும் சரி, மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மற்றவரோடு இணைந்து வாழ்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கவனிப்பாரற்று கிடந்த இஸ்ரயேல் மக்களை எப்படி ஆண்டவர் தேடிச்சென்று, அவர்களை தன் மக்களாக ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய இன்ப துன்பங்களில் உடனிருந்து இணைந்து வழி நடத்தினார் என்பதை முதல் வாசகத்தின் வழியாக நாம் வாசிக்க கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மணவிலக்கை பற்றி ஆண்டவர் இயேசுவினிடத்தில் கேள்விகள் எழுப்பப்படுகிற போது, கடின உள்ளத்தின் பொருட்டு உருவாக்கப்பட்டதே அந்த மண விலக்கு என்பதை எடுத்துக் கூறியவராய், மனிதன் இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு வலியுறுத்துகிறார்.
இந்த ஆண்டவர் இயேசுவின் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாய் நாம், நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், நாம் எப்படி இணைந்து வாழுகிறோம் என்பதை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகிறார். இறைவன் தரும் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களாய் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், கடவுளோடும் சக மனிதர்களோடும் இணைந்து இன்புற்று வாழ்வதற்கான அருளினை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக