நாம் கடவுளின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்போம்.... (9-8-22)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேலை ஆண்டவர் தனது வார்த்தைகளை அறிவிப்பதற்காக அனுப்புகின்ற நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட நாம் கடவுளின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.
வயதில் மூத்தவராக இருந்தாலும் சரி, இளையவராக இருந்தாலும் சரி, சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி, கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கடவுளின் வார்த்தையை அறிவிக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். அக்கடமையை சரிவரச் செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.
நாம் அறிவிக்கின்ற வார்த்தைகளை கேட்டு பலர் உள்ளம் மாறுகிறார்கள் என்றால், அவர்களை கடவுள் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். வழி தவறிப் போன மக்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவர்களை ஆண்டவரை நோக்கி அழைத்து வரக் கூடிய மகத்துவமான பணியை செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இறைவன் தரும் இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் நாம் இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவ்வார்த்தைகளை அடுத்தவரோடு பகிருகின்ற மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக