இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய இறைவார்த்தையானது தூய ஆவியின் துணையால் வாழக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, இந்த ஆவியார் நமக்கு வழங்குகின்ற கொடைகளையும் கனிகளையும் உள்வாங்கிக் கொண்டு தூய ஆவியானவர் காட்டுகின்ற பாதையில், நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான சிந்தனையினை நமக்குத் தருகிறது.
பல நேரங்களில் இந்த உலகப் போக்கின் படி பலவிதமான இச்சைகளுக்கு அடிமையாகிப் போனவர்களாக நமது வாழ்வை நாம் நகர்த்துகின்றோம். தொடக்க காலத்தில் பரிசேயர்களும் சதுசேயர்களும் பலவிதமான சட்ட திட்டங்களை மக்கள் மத்தியில் உருவாக்கி, முதன்மையான இடத்தை நாடக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டு, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் கடவுளின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவுறுத்திய அவர்கள், தங்களின் வாழ்வில் ஆண்டவரின் வார்த்தைகளை ஆழமாக உள்வாங்கவோ அதை வாழ்வாக்கவோ தவறிப் போனார்கள். இன்று அதே பரிசேய மனநிலை, சதுசேய மனநிலை தான் நம்மிடமும் மேலோங்கி காணப்படுகிறது.
பல நேரங்களில் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்வதற்கான வழிகளை கற்பிக்கக் கூடியவர்கள், அதை செயலில் ஈடுபடுத்த மறுக்கக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள். கற்பித்தலோடு தங்கள் வாழ்வு முடிந்து விட்டது என்ற எண்ணத்தோடு பயணிக்கின்ற மனிதர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் தூய ஆவியாரின் துணை கொண்டு செயல்படுகின்ற நாம் ஒவ்வொருவருமே ஆண்டவரின் வார்த்தையை ஆழமாக உள்வாங்கவும், அந்த இறை வார்த்தையை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும், நமது வாழ்வை மற்றவர்கள் பார்த்து, ஆண்டவர் இயேசுவின் பாதையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான முன்னோடிகளாக நாம் செயல்பட வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தையானது நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, தூய ஆவியாரின் துணையோடு நமது வாழ்வை நாளும் ஆண்டவர் இயேசுவின் பாதையில் அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக