புதன், 2 நவம்பர், 2022

ஆண்டவரின் பணியில் ஆர்வம் கொள்வோம்! (22-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பணியினை செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதற்கான  அழைப்பை இறைவன் நமக்கு தருகின்றார்.  கடவுள் தொடக்கத்தில் மனிதனை உண்டாக்கிய போது, தன் உருவில் உண்டாக்கினார் என தொடக்க நூல் ஒன்றாம் அதிகாரம் 27 ஆம் வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.  கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதன், கீழ்ப்படியாமையின் காரணமாக கடவுளின் அருளை இழந்தான். அருளை இழந்த நிலையில் இருந்த மனிதனுக்கு  மீண்டும் அருளை தரக்கூடிய வகையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணிற்கு வந்து, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் சொல்லாலும் செயலாலும் முன்மாதிரிகையாக வாழ்ந்து காண்பித்தார்.

 இந்த இயேசுவைப்  பின்பற்றி வாழக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஆயர்களாகவும், குருக்களாகவும், இறை மக்களாகவும் இருந்து ஆண்டவர் இயேசுவின் பணியினை இந்த அகிலத்தில் உள்ளவர்களோடு இணைந்து செய்வதற்கான ஆற்றலை பெற்றிருக்கிறோம். இந்த ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நமக்கென குறிக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்வதற்கான ஆற்றலை பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

 பல நேரங்களில் கடவுள் நமக்கு தந்திருக்கின்ற பணியினை கண்டும் காணாமலும் உணராமலும் செயல்படுத்தாமலும் நாம் இருக்கின்ற போதெல்லாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறுவது போல, கடவுள் இன்னும் இன்னும் என நாட்களை நமக்கு தந்து கொண்டே இருக்கிறார். நம்மை பண்படுத்துகிறார்; பல மனிதர்கள் வழியாக நாம் எப்படி வாழ வேண்டும்? நாம் நமது பணியினை எப்படி செய்ய வேண்டும்? என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். அவர் அறிவுறுத்துகின்ற இந்த அறிவுறுத்தலையும், அவர் நமக்குத் தருகின்ற காலத்தையும் உணர்ந்து கொண்டு, நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து, ஆண்டவர் இயேசுவைப் போல இந்த சமூகத்தில் நீங்களும் நானும் தொடர்ந்து அன்புப் பணியாற்றுவதற்கு இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.

இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் ஒவ்வொருவருமே நமக்கு கொடுக்கப்பட்ட பணியினை செய்வதில் இன்னும் ஆர்வம் கொண்டவர்களாக தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...