புதன், 2 நவம்பர், 2022

புனிதர்கள் சீமோன், யூதா ததேயு விழா! (28-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையானது திருத்தூதர்களான சீமோனையும் யூதா ததேயுவையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. லூக்கா நற்செய்தி 6ம் அதிகாரம், 16ம் வசனத்தில் நாம் சீமோனோடு , இந்த யூதா ததேயுவின் பெயர் இடம் பெறுவதை திருத்தூதர்களின் பட்டியலில் வாசிக்கலாம். இந்த இரு பெரும் திருத்தூதர்களுமே, விவிலியத்தில் அதிகம் பேசப்படாத நபர்களாகவே கருதப்படுகிறார்கள்.

 சீமானை குறித்து சொல்லுகிற போது, இவர் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என அடையாளம் காட்டப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில் உரோமையர்கள் யூதர்களை பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கினார்கள். இந்த உரோமையர்களை எதிர்க்கின்ற யூதர்கள் ஒவ்வொருவருமே, தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த சீமோனும் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என முத்திரை குத்தப்படுவதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 
அதுபோலவே இன்றைய நாளில் நாம் நினைவு கூர்கின்ற யூதா ததேயுவின் வாழ்வை குறித்து சிந்திக்கின்ற போது, விவிலியத்தில் அதிகம் பேசாத ஒரு நபராகவே இவர் தென்படுகிறார். ஆனால் இவர் இயேசுவினிடத்தில் பேசிய போது, நீர் ஏன் உம்மை மக்களுக்கு வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்துகிறீர் என்ற கேள்வியை எழுப்புகிற போது, இயேசு அவருக்கு மறுமொழியாக, என்னை அன்பு செய்பவர் நான் சொல்வதை கடைப்பிடிப்பார்; கடவுள் அவரை அன்பு செய்வார்; நானும் அவரோடு வந்து குடி கொள்வேன் என்று சொல்லுகின்ற இறை வார்த்தையை விவிலியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். 

திருத்தூதர்களான சீமானும் சரி யூதா ததேயுவும் சரி, தங்கள் வாழ்வில் கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நபர்களாக இருந்தார்கள். வெறுமனே இந்த இயேசுவை பின்பற்றாமல், இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய், தங்கள் வாழ்வை இந்த இயேசுவின் வார்த்தையை அறிவிப்பதற்காக அர்ப்பணித்தார்கள். 

இவர்களை முன்மாதிரிகளாக கொண்டு நாமும் ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...