செவ்வாய், 1 நவம்பர், 2022

புனித அவிலா தெரசா! (15-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகமானது திருத்தூதர் பவுல் எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த முதல் வாசகத்தில் இந்த கடிதத்தின் துவக்கமாக பவுல் எபேசு நகர மக்களிடத்தில் காணப்படுகின்ற நற்பண்புகளை எல்லாம் சுட்டிக் காண்பித்து அந்த நற்பண்புகளுக்காக  நாள்தோறும் நான் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் என்று சொல்லி, தனது கடிதத்தை துவங்குகிறார். 

       இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் இன்று தாய்த்திரு அவையானது புனித அவிலா தெரசா அவர்களை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த அவிலா தெரசாவின் வாழ்வை நாம் முதல் வாசகத்தோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, இந்த அவிலா தெரசா சிறு குழந்தையாக இருந்த போது தன்னுடைய பெற்றோர்களை புனிதர்களின் வாழ்க்கை வரலாறை வாசிக்கச் சொல்லி அதனை கேட்டு அதன் அடிப்படையில் தனது நம்பிக்கையை ஆழப்படுத்திக் கொண்ட ஒரு பெண்மணியாக, சிறுவயதிலேயே துறவு மடம் செல்வதற்கு, நற்செய்தியை அறிவிப்பதற்கு ஆர்வம் கொண்டவராக, தன் வாழ்வை துவங்கினார். 

ஆனால் வீட்டிலும் உறவுகளாலும் இதற்கு தடை விதிக்கப்பட்ட போது, தனிமையில் ஒரு குடிசை அமைத்துக் கொண்டு, அந்த குடிசையிலே தங்கி தன் வாழ்நாளை கழிக்கக் கூடிய ஒரு பெண்மணியாக மாறிப் போனார். காலப்போக்கில் தன்னுடைய தாயை இழந்த போது, தன்னுடைய வாழ்வு முற்றிலுமாக மாறுபட்டுப் போனதை அவர் உணர்ந்திருந்தார். மனம் போன போக்கில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். எந்த அளவிற்கு சிறுவயதில் ஆண்டவரை நாடினாரோ, அந்த அளவிற்கு ஆண்டவரை விட்டு வெகு தொலைவில் செல்லக்கூடிய ஒரு பெண்மணியாக இந்த அவிலா தெரசா  இருந்தார் என்பதை இவரின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

காலத்தின் சுழற்சியில் புனித ஏரோணிமுஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறை வாசித்தபோது அதன் அடிப்படையில் தான் செல்லுகின்ற பாதை தவறு என்பதை உணர்ந்த ஒரு பெண்மணியாக கார்மல் சபையில் சேர்ந்து, பலவிதமான செப முயற்சிகளில் ஈடுபட்டு, கடுமையான துறவு வாழ்வின் வழியாக பல காட்சிகளை கண்டு, அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். இவரின் இந்த ஆன்மீக முயற்சிகளை கண்டு, அவரை சபையின் தலைவியாக உயர்த்திய போது, அவர் பலவிதமான சீர்திருத்தங்களை தன் சபையில் கொண்டு வந்தார். எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்தார். 
இந்த மாற்றங்களை கொண்டு வருகிற போதெல்லாம் பலவிதமான தடைகளை சந்திக்க நேர்ந்தது. தடைகளுக்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, தன் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்ற மனநிலையோடு ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல சபைகளை துவங்கியவர், இந்த புனித அவிலா தெரசா அவர்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, என்னை நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டால், நானும் உங்களை தந்தையின் முன்னிலையில் ஏற்றுக் கொள்வேன் என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, தான் வாழுகின்ற சமூகத்தில் தனது வாழ்வு ஆண்டவருக்கான வாழ்வு என்பதை உணர்ந்தவராக, தன் வாழ்வு முழுவதுமே ஆண்டவர் இயேசுவை அறிக்கையிடுகின்ற ஒரு பெண்மணியாக பல்வேறு தியாகங்களை முன்னெடுத்து, பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இறுதி வரை ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு பெண்மணியாக இந்த அவிலா தெரசாவின் வாழ்வு இருந்தது என்பதை  நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த அவிலா தெரசாவின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்து, அனுதினமும் நமக்குள்ளாக இருந்து, நன்மை தீமையை எடுத்துரைக்கின்ற தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற மனிதர்களாக நாமும் புனித அவிலா தெரசாவைப் போல , நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...