இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள தயங்கிய பவுல், தான் எப்படி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன் என்பது பற்றியும், இந்த இயேசு கிறிஸ்துவை பிறவினத்தாருக்கு அறிவிப்பதற்காக என்னை அவர் தாயின் வயிற்றிலே தெரிந்து கொண்டார் என அவர் கூறுவதையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.
இந்த இறைவார்த்தைப் பகுதியின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது, மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே அதிலும் குறிப்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே, இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாடிச் செல்பவர்களாக, அவரோடு நேரம் செலவிடுபவர்களாக இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறைவார்த்தை நமக்கு தருகிறது.
பல நேரங்களில் இந்த இயேசுவை ஏற்றுக் கொண்ட நாம் பல பணிகளில் மும்முரமாக இருக்கின்றோம். ஆண்டவரோடு அமரவும், அவரோடு உரையாடவும், அவர் நமக்கு சொல்லித் தருகின்ற வாழ்வுக்கான பாடங்களை எடுத்துக்கொண்டு அதற்கு நாம் செயல் வடிவம் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டுகிறவர்களாக, நேரமில்லை என்று சொல்லுகிறவர்களாகவே பல நேரங்களில் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் கடவுளைத் தேட வேண்டும். அவரோடு உரையாட வேண்டும். உறவாட வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறுகின்ற மார்த்தா மரியா நிகழ்வு வழியாக, இறைவன் நமக்கு எடுத்துரைக்கிறார்.
இறைவன் எடுத்துரைக்கின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நீங்களும் நானும் இந்த ஆண்டவரை நாடிச் செல்ல, அவரோடு நேரம் செலவிட ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக