ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் இறை வார்த்தையானது, ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் நாளும் வளர வேண்டும் என்ற மைய சிந்தனையினை நமக்குத் தருகின்றது. நம்பிக்கையோடு நாம் ஆண்டவரிடத்தில் பலவிதமான மன்றாட்டுகளை எழுப்புகிற போதெல்லாம், பல நேரங்களில் இந்த இறைவன் நமது மன்றாட்டுக்கு செவி தராமல் காலம் தாழ்த்துகிறாரோ என்ற எண்ணமானது நம்மில் மலர்வது உண்டு.
ஆனால் நம்பிக்கையோடு தொடர்ந்து இறை வேண்டலில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இயேசு ஒரு உவமையை சுட்டிக் காட்டுகிறார். நேர்மையற்ற ஒரு நீதிபதியே தன்னை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்ற ஒரு பெண்ணுக்கு நீதி வழங்குகின்றார் என்றால், நம்மை படைத்து, பராமரித்து வருகின்ற இறைவன், தகுந்த நேரத்தில் நம் தேவைகளுக்கு, தகுந்த நேரத்தில் நம் மன்றாட்டுகளுக்கு பதில் தரக்கூடியவராக இருப்பார் என்ற ஆழமான நம்பிக்கையோடு, நாம் இது நாள் வரை நமது வாழ்வில் சந்தித்த இன்ப துன்பங்களில் எல்லாம் உடனிருந்து வழி நடத்திய இறைவன், இனி வருகின்ற நாட்களிலும், நாம் நம்பிக்கையோடு கேட்பவற்றிற்கெல்லாம், தகுந்த நேரத்தில் பதில் தருவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு, நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழமான சிந்தனையினை இன்றைய இறை வார்த்தை வழியாக , இறைவன் நமக்கு தருகின்றார்.
இந்த இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்திய மனிதர்களாக, முதல் வாசகம் சுட்டிக்காட்டுவதன் அடிப்படையில், நாம் நமது வாழ்வை, பிறர் அன்புப்பணி செய்வதில் அமைத்துக் கொண்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக