இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் இறை வார்த்தையானது இறைவனது வார்த்தைகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அந்த வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு கற்பிக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் கலாத்திய நகர மக்கள், தாங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஆண்டவரைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களிடையே பலவிதமான குழப்பங்கள் மேலோங்கிய போது, சட்டத்தை பின்பற்றுவது மட்டுமே கடவுளுடைய வார்த்தைகளை வாழ்வாக்குவது என எண்ணக்கூடியவர்களாக மாறிப்போனார்கள்.
ஆனால் சட்டங்களை விட ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த ஒவ்வொரு செயலையும் கண்டும் கேட்டும் அதன் அடிப்படையில் நம்பிக்கையில் நாளும் வளர்ந்த அவர்கள், தங்கள் வாழ்வில் தடம் புரண்டுவிடக் கூடாது என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக பவுல் அடியார் எடுத்துரைக்கின்றார்.
இந்த வாசகங்களின் பின்னணியோடு நமது வாழ்வை நாம் இறைவார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, நாளும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கக்கூடிய நாம், இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து வலியுறுத்தக் கூடிய வாழ்வுக்கான பாடங்களை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாளும் இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான ஆற்றலை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தர வேண்டுமாய் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக