ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் லாத்தரன் பேராலயத்தை நினைவு கூர்கிறோம். ஏன் ஒரு ஆலயத்தை நினைவு கூற வேண்டும் என்று வரலாற்றை பின்னோக்கி பார்க்கிற போது, தொடக்க காலத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாம் இயேசுவை அறிவிப்பதற்கு அஞ்சினார்கள். காரணம் பலவிதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளானார்கள். எனவே யாரும் அறியாத இடங்களில் கூடி ஜெபித்தவர்களாக, இருந்தவர்களுக்கு அப்போதைய அரசன் கான்ஸ்டாண்டின், கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அறிவித்து , தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றிக் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்த லாத்தரன் பேராலயத்தில், பலவிதமான மன்றாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன. பலவிதமான திருத்தூதர்களுடைய புனிதர்களுடைய திருப்பண்டங்கள் அனைத்தும் இங்கு பாதுகாக்கப்பட்டன.
ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் ஆயரின் இருக்கை கொண்ட பேராலயம் இருப்பது போல, திருத்தந்தையின் இருக்கை கொண்ட பேராலயமாக இப்பேராலயம் விளங்கியது. எனவே இது முதன்மை வாய்ந்த ஆலயமாக கருதப்பட்டது. இந்த ஆலயத்தை நினைவு கூர்கின்ற இந்த நன்னாளில், நாம் நமது உடலாகிய ஆலயத்தை குறித்து சிந்திப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் கடவுள் தங்கும் ஆலயம் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வாறு பேணுகிறோம்? ஆண்டவரின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக, கடவுள் தங்குகிற இல்லமாக நமது உடல் இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம்.
கடவுள் எங்கோ இருப்பவர் அல்ல; நம்முள் ஒருவராக நம்மிடையே இருப்பவர். நம்முள் உறைகின்ற இறைவனுக்கு தகுந்த வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும். நமது வாழ்வில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் தவறுகளையும் வைத்துக்கொண்டு, ஆண்டவர் குடிகொள்ளுகின்ற ஆலயம் நாம் என சொல்லுவது அர்த்தமல்ல.
ஒவ்வொரு நாளும் அனுதினமும் நம்மில் உறைந்திருக்கின்ற இறைவனுக்கு தகுந்த இடமாக நமது உள்ளத்தை மாற்றிட, இந்த நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நமது உடலாகிய ஆலயத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு, ஆண்டவரின் உறைவிடமாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக