இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இறை வார்த்தையானது வெளிப்புற அடையாளங்களை நாடுவதை விட, உள்ளார்ந்த மனமாற்றத்தை பெற்றுக் கொண்ட மனிதர்களாக நாம் வாழ்வதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் கலாத்திய நகர மக்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது மட்டுமே கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை தேர்ந்து கொண்டதன் அடையாளம் என வெளிப்புற அடையாளத்தை நாடிய போது, கடவுள் விரும்புவது இந்த வெளிப்புற அடையாளத்தை அல்ல என்பதை பவுல் தனது கடிதத்தின் வாயிலாக விளக்குகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவை விருந்துக்கு அழைத்த நபர், இயேசு கைகளை கழுவாமல் விருந்து உண்பதைக் குறித்து இயேசுவின் செயலில் குற்றம் கண்டுபிடிக்கின்ற போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, வெளிப்புற அடையாளத்தை நாடக்கூடிய உங்கள் உள்ளமானது, தூய்மையற்று இருக்கிறது என்பதை எடுத்துரைத்து, உள்ளார்ந்த மாற்றத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.
வெளிப்புற அடையாளங்களை நாடுகின்ற கிறிஸ்தவர்களாக நாம் இல்லாமல், உள்ளார்ந்த மாற்றத்தோடு நம்மிடம் இருக்கின்ற நன்மைத்தனங்களை அடுத்தவருக்கு வழங்குகின்ற மனிதர்களாக, நாம் நாளும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக