செவ்வாய், 1 நவம்பர், 2022

நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக! (2-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே, கடவுள் மீதான நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் ஆழப்பட வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. பல நேரங்களில் பலவிதமான வேண்டுதல்களை முன்னெடுக்கின்ற போது கடவுள் நமது குரலுக்கு செவி கொடுக்கவில்லையோ என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழுகிற போதெல்லாம், கடவுள் தகுந்த நேரத்தில் பதில் தருவார் என்று நம்பிக்கையோடு, மன உறுதியோடு, நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்துகின்றது. 

இன்று இரண்டாம் வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு கோழை உள்ளத்தை தந்தவர் அல்ல; வலிமையான இதயத்தை தந்திருக்கிறார். கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நீங்களும் நானும் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்பதை இரண்டாம் வாசகத்தின் வாயிலாக இறைவன் இன்றைய நாளில் எடுத்துரைக்கிறார்.
 அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கையோடு நாம் சொல்லுகிற சொல்லுக்கு வலு உண்டு என்பதை எடுத்துரைக்கிறார். நம்பிக்கையோடு ஒரு காட்டு அத்தி மரத்தை பெயர்ந்து கடலுக்கு செல்லென்றால் அது நடக்கும் என்கிறார். 

 இயேசுவின் இந்த வார்த்தைகள் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை உங்களுள்ளும் என்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக தோல்விகளையும் ஏமாற்றங்களையும் நாம் சந்திக்கின்ற போதெல்லாம், கடவுள் மீது  கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவர்களாக, வேரூன்றியவர்களாக இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில்  மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...