இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் இந்த அழகிய உலகத்தை படைத்தார். இந்த படைப்புகளின் மீது கடவுளின் ஆவியானவர் இருந்து, அனைத்தையும் இயக்கக் கூடியவராக இருக்கின்றார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்த மனிதர்களாக, நமது பார்வையை இயேசுவை நோக்கி பதித்துக்கொள்ள, இன்றைய நாள் இறை வார்த்தையானது நமக்கு அழைப்பு தருகிறது.
இயேசுவை சந்திக்க விரும்பிய ஒரு மனிதனை, இயேசு சந்தித்தார். அவனின் வாழ்வு முற்றிலும் மாறுபட்டது என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கின்றோம். சக்கேயு என்ற மனிதனின் பெயருக்கு , நேர்மையானவன் எனப் பொருள். ஆனால், அவனது வாழ்வோ நேர்மையற்றதனமாக இருந்தது. யூதர்களிடமிருந்து பணத்தினை வசூலித்து உரோமையர்களுக்கு கொடுக்க வேண்டிய பணியினை சிரமேற் கொண்டு செயல்பட்டாலும் , யூதர்களிடமிருந்து அதிகமான தொகையை வசூலித்து, வரியாக செலுத்த வேண்டியதை செலுத்திய பின், மீதமானதை தனக்கென சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனாக இருந்தான்.
இந்த மனிதனின் நேர்மையற்றதனத்தை எவரும் சுட்டிக் காட்டவில்லை. இயேசுவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, குட்டையாக இருந்த மனிதன், அத்தி மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். இயேசு அவனை அன்னாந்து பார்த்து, "உன் வீட்டிற்கு நான் வருகிறேன்; உன்னோடு உணவருந்த இருக்கிறேன்" என்று சொன்னவுடனே, தன் வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்தான்.
எல்லோரும் கண்டு வியக்கின்ற இந்த இயேசு கிறிஸ்து, என்னை அழைக்கின்றார். என் வீட்டிற்கு வருவதாக சொல்லுகின்றார். இவரை நான் என் வீட்டிலும், என் இதயத்திலும், ஏற்க நான் தகுதியுடையவனா என சிந்தித்தவராய், தன் வாழ்வை மாற்றிக் கொள்ள முயலுகிறார். நான் இதுநாள் வரை யாரிடமிருந்தும் ஏமாற்றி பலவற்றை அபகரித்து இருந்தாலும், அதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாக, தன் வாழ்வை மாற்றக்கூடிய சக்கேயுவை நற்செய்தி வாசகம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
இந்த சக்கேயுவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்ப்போம். அனுதினமும் ஆண்டவரை சந்திக்க வருகின்ற நாம், வெறுமனே சந்தித்து விட்டு செல்கிறோமா? அல்லது நாம் சந்திக்கின்ற இந்த இறைவனின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து, நல்லதொரு மாற்றத்தை நமக்குள் நாம் விதைத்துக் கொண்ட மனிதர்களாக, இந்த சமூகத்தில் அனுதினமும் பயணம் செய்கிறோமா? சிந்திப்போம்.
நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாமே நமது செயல்பாடுகளை சரி செய்து கொண்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ, சக்கேயுவின் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரியான வாழ்வாக அமைகிறது. இந்த முன்மாதிரியான வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக