செவ்வாய், 1 நவம்பர், 2022

நன்றியின் மக்களாக வாழ்வோம்! ( 9-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் இறை வார்த்தையானது கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற மனிதர்களாக நாம் நாளும் இருக்க வேண்டும் என்ற மைய சிந்தனையினை நமக்கு வழங்குகிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் சிரியா நாட்டு படைவீரரான நாமான் தொழு நோயிலிருந்து குணம் பெற்று, கடவுளுக்கு நன்றி சொல்லி அன்பளிப்பினை தர வருகின்ற போது, எலிசா அதனை வேண்டாம் என மறுக்கின்றார். கடவுளே உண்மையானவர். இஸ்ரயேல் மக்களை வழிநடத்துகின்ற இறைவனே உண்மையான இறைவன் என அறிக்கை இடக்கூடியவராக , தனது நன்றியினை வெளிப்படுத்துகின்ற நபராக இந்த நாமானை முதல் வாசகமானது நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு பத்து தொழு நோயாளர்களுக்கு குணம் தருகிறார். அவர்களுள் சமாரியாவை சார்ந்த ஒருவர் மட்டுமே, திரும்பி வந்து ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி சொல்வதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்தவர். இந்த உயிர்த்த ஆண்டவரை நம்புகிற நாம், இவர் வழியாக பல விதமான நன்மைகளை நமது வாழ்வில் அடைகின்றோம். நாம் அடைந்த எல்லா விதமான நன்மைத்தனங்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றி சொல்லக் கூடிய மனிதர்களாக நாம் நாளும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. 
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். கடவுள் நமக்கு செய்த எல்லா விதமான நன்மைகளையும் நன்றியோடு எண்ணிப் பார்த்து, நன்றி சொல்லுகின்ற நன்றியின் மக்களாக நாம் இருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் இன்றைய நாளில் நாம் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...