இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் அன்பு இரக்கமும் மேலோங்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே பல நேரங்களில் நற்செய்தியை நமது தேவைக்கேற்றார் போல, நமது மனதின் அடிப்படையில் நமது எண்ணங்களுக்கு ஏற்ப புரிந்து கொள்ளக் கூடியவராகவும், அல்லது தங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அதை விளக்கிக் கூறுபவர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, அதனையே உண்மை என ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுமாக பல நேரங்களில் நாம் நமது வாழ்வில் இருந்திருக்கலாம்.
ஆனால்,ஆண்டவரின் வார்த்தைகள் வலியுறுத்துவது நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்பதையும், அடுத்தவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும், அதிலும் குறிப்பாக நலிவுற்று, தேவையில் இருப்பவரை கண்டும் காணாத மனிதர்களாக நாம் சென்று விடாமல் அவர்களின் தேவையில் உடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் இறை வார்த்தையானது நமக்கு எடுத்துரைக்கிறது.
33 ஆண்டுகள் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இப்பணியை செய்தார். அப்பணியை செய்வதற்காகவே நீங்களும் நானும் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறுகின்ற நல்ல சமாரியன் உவமை மூலமாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அன்பிலும் இரக்கத்திலும் நிலைத்திருக்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து, நம்மை நாம் நெறிப்படுத்திக் கொள்வதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக