இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, நன்மை செய்து பரிவு காட்டக்கூடிய நபர்களாக நாம் ஒவ்வொருவருமே இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார் என விவிலியத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட, 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கில் துன்புற்ற ஒரு பெண்மணிக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து நலம் தருகிறார். இயேசுவின் இச்செயலை பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஓய்வு நாளில் இந்தச் செயலை இவர் ஏன் செய்தார் என பலரும் அவர் செயலில் குற்றம் கண்டுபிடிக்கின்ற போது, ஓய்வு நாளாகவோ எந்த நாளாகவோ இருந்தாலும், நன்மை செய்வதற்கும் பரிவு காட்டுவதற்கும் நேரம் காலம் கூடி வர வேண்டுமென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இன்று இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, முதல் வாசகம் குறிப்பிடுவதற்கு ஏற்ப, உலகத்தில் இருக்கின்ற பலவிதமான தீமைகளுக்கு அடிமையாகி போகின்ற மனிதர்களாக நாம் இருந்து விடாமல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே நன்மை செய்து பதிவு காட்டக்கூடிய நல்ல நபர்களாக இந்த சமூகத்தில் தொடர்ந்து
பயணிப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில்
இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக