வியாழன், 3 நவம்பர், 2022

அனைத்து ஆன்மாக்களின் பெருவிழா (2-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
         தாய்த்திரு அவையோடு இணைந்து, இன்றைய நாளில் நாம் இறந்து போன ஆன்மாக்களை  நினைவு கூருகிறோம். மண்ணில் வாழ்ந்த போது, நமக்கு முன்மாதிரிகளாக, பலவிதமான நற்பண்புகளை நம்மிடம் விட்டுச் சென்ற, மறைந்த நமது குடும்ப உறவுகள் ஒவ்வொன்றையும் நன்றியோடு நினைவு கூருவதற்கான நாள் இந்த நாள். 

இந்த மண்ணில் வாழ்ந்த போது, அவர்கள் மீது எத்தனையோ கசப்பான  எண்ணங்கள் நம் மத்தியில் இருந்தாலும், அவர்களின் பிரிவு நம்மில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும். அவர் மீதான ஒரு வெற்றிடம், இன்றும் நமது குடும்பங்களில் நிலைத்திருக்கிறது. 
          நம்மோடு வாழ்ந்து, உண்டு, பழகி நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை, தங்கள் வாழ்வால் நமக்கு வழிகாட்டிய , நமது குடும்பங்களில் வாழ்ந்து மரித்த, அனைத்து ஆன்மாக்களையும் நன்றியோடு நினைவு கூர்வோம். 

இறந்து போன ஆன்மாக்கள் அனைத்துமே ஆண்டவரிடத்தில் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்தார் ‌‌‌. இறந்த இயேசு மூன்றாம் நாள் சொல்லியபடி உயிர்த்தெழுந்தார். இந்த இயேசுவோடு இறந்து போன ஒவ்வொரு சகோதர சகோதரியும் உயிர்த்தெழுகின்றோம்.
தொடக்க கால திரு அவையில் இந்த உயிர்ப்பை குறித்து பலவிதமான பிரச்சனைகள் எழுந்தது.  ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்தவர்கள், மரணத்தை சந்தித்தபோது,  நம்பிக்கையாளர் பலர் கேள்வி எழுப்பினார்கள். இவர்களெல்லாம் ஆண்டவரின் வருகைக்கு காத்திருந்தார்கள். ஆனால் மரணத்தை சந்தித்து விட்டார்களே! இவர்களுக்கு உயிர்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்த போது, ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது இறந்த ஒவ்வொருவருமே, மாட்சி பொருந்திய உடலோடு உயிர்த்தெழுவோம் என திருத்தூதர்கள் கற்பித்தார்கள். அந்த கற்பித்தலின் அடிப்படையில் திருஅவையின் இந்த நம்பிக்கையில் நாமும் நிலை பெற்றிருக்கிறோம்.

நம்மோடு வாழ்ந்து மரித்த நமது உறவுகள் நமக்கு விட்டுச் சென்ற வாழ்வுக்கான பாடங்களை நினைவு கூர்ந்து நன்றியோடு அவர்களுக்காக இந்நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்ய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். 
                  நம்மோடு வாழ்ந்த நமது குடும்ப உறவுகளை நினைவு கூர்வோம். விவிலியத்தில் காணப்படுகின்ற இறந்து போன செல்வந்தன், தன்னுடைய உறவுகளுக்காக நரகத்தில் துன்பப்படுகின்ற வேளையில், ஆபிரகாமை நோக்கி மன்றாடியது போல, நமது உறவுகளும் மரித்து, விண்ணகத்தில் இறைவனின் திருவடிகளில் அமர்ந்தவர்களாய் நமக்காக அனுதினமும் ஜெபிக்கின்றார்கள். அவர்களின் பரிந்துரை செபம் நமது குடும்பங்களுக்கு ஆசிகளை பெற்று தருகிறது என்ற ஆழமான நம்பிக்கையோடு, அவர்கள் விட்டுச் சென்ற நற்பண்புகளை நமதாக்கிக் கொள்ள, இன்றைய நாளில்
 இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...