வெள்ளி, 19 மார்ச், 2021

என்னை யார் அறிவார்...? (20.3.2021)

என்னை யார் அறிவார்...?

நல்ல எண்ணங்களின் பிறப்பிடமாகிய நல்லவர்களே...! வணக்கம்.

இன்றைய இறைவார்த்தை அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
 
பக்தன் ஒருவன் கடவுளிடம் கூறினான்....
உன்னை நினைப்பதில் பாதி...
மறப்பதில் பாதி...
இப்படியே கழிந்தது என் ஆயுள்.
என்று...
இன்று எண்ணங்களுக்கு மத்தியில் நகரும் மனிதனை முழுமையாக  இவ்வுலகில் அறிந்தவர் யாருமில்லை என கூறலாம். ஆனால் இறைவன் ஒருவரே இதய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அறிந்திருப்பவர் என இன்றைய முதல் வாசகம் வழியாக எரேமியா நமக்கு எடுத்துரைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கைது செய்வதற்காக ஒரு கூட்டத்தினரை அனுப்பி விடுகின்றார்கள் சிலர். ஆனால்  இயேசுவை கைது செய்யச் சென்றவர்கள் எல்லாம் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு உள்ளம் மாற்றம் கொண்டவர்களாக இவர் நேர்மையாளர், இறைவாக்கினர், இவரைப் போல் வேறு ஒருவரை நாம் இதுவரை பார்த்ததில்லை இவரையா கைது செய்ய வந்தோம்? என்ற எண்ணத்தோடு தங்களை கைது செய்ய அனுப்பியவர்களிடம் திரும்பிச்சென்று அவர் நல்லவர் என்பதை எடுத்துரைக்கிறார்கள். ஆனால் முன் சார்பு எண்ணம் கொண்ட சிலரோ அவருக்கு சார்பாக பேசுபவர்களை எல்லாம் திருச்சட்டத்திற்கு எதிரானவர்களாக சித்தரிக்கிறார்கள்.

இது போன்ற நிகழ்வை நாமும் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கலாம். பல நேரங்களில் நாம் ஒருவர் பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி பிறரிடம் நாம் பேசும் பொழுது, எதிரே இருக்கக் கூடிய நபர் அவர் அப்படி எல்லாம் இல்லை. அவர் நல்லவர். அவர் நீங்கள் சொல்வது போல இல்லை என்று கூறும் பொழுது அவர்களின் குரலுக்கும், கருத்துக்கும் செவி கொடுக்க மறுத்து நாம் சொல்வதை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன்படி அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களும்  நம் கருத்துக்கு எதிரானவர்கள் என்று கூறக்கூடிய மனப்பாங்கு கொண்டவர்களாக தான் இன்று நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம்.
இத்தகைய பண்பு நலமான வாழ்வை அமைத்துக் கொள்ள உதவாது என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஒருவரை பற்றி நாம் கொண்டிருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்களை வாழ்வில் எப்போதும் கொண்டிருப்பது முறையல்ல. முன்சார்பு எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் நாம் அடுத்தவரை நேர்மறையாக பார்க்கவும், அவர்கள் செய்யக்கூடிய செயல்களை நேர்மறையாக கண்டுகொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது இறைவன் படைத்த இந்த உலகத்தில் நாம் இன்புற்று ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ முடியும்.  

ஒருவரைப் பற்றி நாம் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணங்கள் அவர் செய்யக்கூடிய ஆயிரம் நற்பண்புகளையும் தவறாகத்தான் பார்க்க நம்மை தூண்டுகிறது. இதனை நாம் முதலில் உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எப்படி இயேசுவின் நற்பண்புகளை அவரைக் கைது செய்யச் சென்றவர்கள் வந்து கூறியபோது ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அதுபோலத்தான் பல நேரங்களில் நாமும் நம்மைச் சுற்றி பலரும் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் நமது சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்த்து மாற்றத்தையும் உள்வாங்கிக்கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.
மண்புழுக்கள் கூட தன் உடலை இழுத்து இழுத்துக் கொண்டு தான் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் சென்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் தான் தான் எண்ணுவதற்கு வெளியே உலகம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது எண்ணங்களை கடந்து நாம் அடுத்தவரிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை கண்டுகொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இயேசுவின் பாதையில் அவரது இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடிய உண்மை பணியாளர்களாய் அவரை பின் தொடர்வோம். 

1 கருத்து:

  1. இவ்வுலகம் ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. நமது மனித உடலிலும் கூட அனைத்து செல்களும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. மனிதர்களாகிய நாமும் நமது நல்ல எண்ணங்கள் வழியாக நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...