புனித வெள்ளி
முன்னுரை:
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே முப்பத்து மூன்று ஆண்’டுகள் நடந்த போராட்டத்தின் முடிவு தீர்த்துக்கட்டுவதே தீர்ப்பானது. அத்தீர்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. அன்பர்களே ஆண்டவரின் திருப்பாடுகளை நம்முடைய வாழ்வோடு இணைத்துத் தியானிக்கக் கூடியிருக்கும் நம் எல்லோர்க்கும் இது ஓர் அன்பின் விழா. கடவுள் அன்புமயமானவர், அவர் நம் அனைவரையும் அன்பு செய்கின்றார் என்று வெறும் கருத்துக்களுக்குள் கடவுளை சுருக்கிவிடுகின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும் விழாவே இப்புனித வெள்ளி. ஆம், தந்தையாம் கடவுள் நம்மீது அன்பு கொண்டதால்தான் தம் மகன் இயேசுவை இவவுலகிற்கு அனுப்பினார். நம் அனைவரையும் நண்பர்கள் என்று அழைத்த இயேசு, தனது நண்பர்களாகிய நமக்காகத் தன் உயிரையே சிலுவையில் கையளித்து அவரது அன்பின் மகத்துவத்தை நமக்கு வெளிப்படுத்தினார். இப்படித் தன் அன்பை சிலுவையில் வெளிப்படுத்திய இயேசு நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்ற புதிய கட்டளையை நமக்கு வழங்கினார். இதையே “அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் இருப்பதாக,” எனப் பவுலடியார் குறிப்பிடுகின்றார். இந்த அன்பே நம் வாழ்வின் மையம். அதுவே நம் கிறிஸ்தவத்தின் மையம்.
இந்த உண்மையை உணர்த்தும் இவ்வழிபாடு
1. இறைவார்த்தை வழிபாடு,
2. திருச்சிலுவை வழிபாடு,
3. நற்கருணை வழிபாடு என மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. இதோ இப்பொழுது குருவானவர் திருஉடை அணிந்து திருப்பீடத்தின்முன் முகம்குப்புற தரையில் விமுந்து மௌனமாக மன்றாடுவார். இயேசு நம்மீது கொண்ட அன்பினால் தம்மையே வெறுமையாக்கிக் கொண்டார் என்பதை இத்திருச்சடங்கு விளக்குகின்றது. நாமும் நமக்கு அடுத்திருக்கும் சகோதர சகோதரிகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அன்பு செய்யும் வரம் வேண்டி இவ்வழிபாட்டில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை: எசா 52: 13-53:12
குவலையை கண்டு கண்ணீர் வடிக்காமல் போராடும் மனிதன் காலத்தால் அழியாதவன் என்பதற்கு ஏற்ப இயேசுவின் பாடுகள் நம்மை உடல், உள்ள நோயிலிருந்துக் குணப்படுத்தும் அருமருந்து. இயேசு தனது மகிமைக்காக, துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவும், அவரது மக்களாகிய நம்மை பாவ இருளிலிருந்து மீட்டெடுக்கவும், தன்மேல் ஏற்றுக்கொண்ட சுகமான சுமைத் தான் இந்த தியாகம். இயேசுவின் பாடுகளை நம் கண்முன் நிறுத்தும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: எபி 4:14-16, 5:7-9
இயேசு கிறிஸ்து முழுமையானக் கடவுள். முழுமையான மனிதன் என்பது நமது நம்பிக்கை. அதனால்தான் திருஅவையின் வழிகாட்டுதலோடு அவரை இறைமகன் என அழைக்கிறோம். அவர்தனது பாடுகளின்போது, எவ்விதத்திலும் கடவுள் தன்மையை முன்னிருத்தவில்லை. மாறாக, நம்மைப்போல் ஒரு மனிதராகப் பாடுகளை எதிர் கொண்டார். கீழ்படிதல் மற்றும் மீட்பு எனும் இலட்சிய வேட்கையோடுச் செயல்பட்டதால், நாம் அனைவரும் கடவுளின் அருளிரக்கத்தைக் கண்டு கொள்ள முடிந்தது எனக்கூறும் இரண்டாம் வாசகத்திற்கு நமது மனங்களைத் திருப்புவோம்.
திருச்சிலுவை வழிபாடு
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று மொழிந்து, அதை தன் வாழ்வாக்கிய நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் கல்வாரி பாடுகளை, நம் கண்முன் நிறுத்தியவர்களாக இன்றைய வழிபாட்டின் இரண்டாவதுப் பகுதியான திருச்சிலுவை வழிபாட்டிற்குள் நுழைவோம்.
இப்போது குருவானவர், திருச்சிலுவையைக் கையிலேந்தி, “திருச்சிலுவை மரம் இதோ, இதிலேதான் தொங்கினார் உலகத்தின் மீட்பர்” என்று மும்முறைப் பாடுவார். அதற்கு பதில் மொழியாய் நாம் அனைவரும் இணைந்து “வருவீர் ஆராதிப்போம்” என்று பாடுவோம். மும்முறைப் பாடியப்பின் வரிசையாக வந்து திருச்சிலுவையை முத்தமிட்டு ஆராதனை செய்வோம். நம்மீது கொண்ட உயர்ந்த அன்பினாலும், நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, நம்மை உருமாற்றிட, அவமானங்களைத் தாங்கி, காயங்கள்பட்டு, இரத்தம் சிந்திய இயேசுவின் வேதனைகளை உள்வாங்கியவர்களாய், பாவங்களைக் களைந்துப் புனித வாழ்வு வாழ உறுதியெடுத்தவர்களாய் இவ்வழிபாட்டில் பங்கேற்போம்.
திருவிருந்து வழிபாடு:
இப்போது, திருவிருந்து வழிபாடு ஆரம்பமாகிறது. பீடத்தின்மீது துணிவிரிக்கப்பட்டு, திருமேனித்துகிலும், திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும். பின்பு நேற்றையத் திருப்பலியில் புனிதப்படுத்தப்பட்ட நற்கருணைப் பீடத்திற்கு எடுத்து வரப்படும். நமது உள்ளங்களில் எழுந்தருள இருக்கும் இறைவனை வரவேற்க தொடர்ந்துப் பக்தியுடன் இத்திருவிருந்து வழிபட்டில் பங்கேற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக