புதன், 3 மார்ச், 2021

வாருங்கள் செயலில் இறங்குவோம்... (4.3.2021)

வாருங்கள் செயலில் இறங்குவோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய ஒரு சிறிய விமானத்தில், ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு குரு, ஒரு சிறுவன் ஆகிய 4 பேரும் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விமானி உரத்த குரலில் கூறினார், "விமானம் பழுதடைந்து விட்டது. எனது கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் கீழே குதித்து விடுங்கள். அங்கே மூன்று பாராசூட் உள்ளது!" என்று கூறிக்கொண்டே அவர் குதித்து தப்பித்து விட்டார். உடனே மருத்துவர், "நான் பிற உயிர்களை காப்பாற்றும் ஒரு பொது சேவகன். நான் போகிறேன்", என்று கூறி ஒரு பாராசூட்டை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார். அடுத்ததாக வழக்கறிஞர், "இந்த உலகில் சண்டை அதிகமாகிவிட்டது. நீதி மறைந்து வருகிறது. எனவே மக்களுக்கு உதவ நான் போகிறேன்", என்றவாரே குதித்துவிட்டார். மூன்றாவதாக இருந்த குரு மூன்றாவது பாராசூட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்து, "தம்பி! நீ போ. நான் வயதானவன். இந்த உலகில் வாழ்ந்து அனுபவித்தவன். நீ வாழ வேண்டியவன்", என்றார். சிறுவனோ, "இல்லை குருவே! இருவருமே வாழலாம். ஏனென்றால் வழக்கறிஞர் அவசரத்தில் என் பள்ளிக்கூட பையை எடுத்துக்கொண்டு இறங்கி விட்டார். கடவுள் உங்கள் தாராள உள்ளத்தை அறிந்து இருக்கிறார்" என்றான். 
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் செழிப்போடு வாழ்வர். 
ஆனால் வலுவற்ற மனிதரில் நம்பிக்கை வைப்பவர்கள் பாலைநில புதர்ச் செடிகள் போல வறண்டு போவர் என்று கூறுகிறார். நமது உள்ளத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆய்ந்து அறிபவராக ஆண்டவர் இருக்கின்றார் எனவும் அவரிடத்தில் நேர்மையோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம் எனவும் இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, ஆண்டவரால் பராமரிக்கப்பட்டு விண்ணக பேரின்பத்தை உரித்தாக்கிக் கொண்ட ஏழை லாசரைப் பற்றியும், பகட்டான ஆடைகளும், பந்தி நிறைய உணவு வகைகளும், வீடு நிறைய செல்வங்களும் கொண்டிருந்த செல்வந்தர் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைக்காமல் வலுவற்ற இவ்வளவு சார்ந்த காரியங்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தியதால், அவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் இறுதியில் அணையாத நெருப்புக்குள் தள்ளப்பட்டதையும் இன்று நமக்கு எடுத்துரைக்கின்றார். 

       ஆம் அன்புக்குரியவர்களே! எங்கே சுயநலம் இருக்கிறதோ அங்கே கடவுள் இல்லை. எங்கே இரக்கம் இருக்கிறதோ, அங்கே கடவுள் உள்ளார்.
நம்முடைய வாழ்விலும் நாம் அன்பையும் கருணையையும் மையப்படுத்தி வாழ அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்தில் யாரும் உலக முடிவு வரை நிலையாக வாழப்போவதில்லை. எல்லோரும் மரணத்தை நோக்கி தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். மரணத்தை சந்திக்க நீண்ட கால வரிசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னும் பின்னும் எத்தனையோ பேர். நாம் நமது வாழ்வின் இறுதி நாட்களில்,  நாம் வாழும் போதே சக மனிதர்களுக்கு இரக்கம் காட்டி இருக்கலாம், அன்பு செய்திருக்கலாம், மன்னித்து இருக்கலாம், அவர்களை கை தூக்கிவிட்டிருக்கலாம், அவர்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கலாம் என்று நினைத்துப் பார்த்து வருந்துவதை விட, இன்றே இப்பொழுதே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திலும் அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டவர்களாக வாழ இன்று உறுதி ஏற்போம். பிறருக்கென வாரி வழங்கிட நம்மிடம் சொத்துகள் இல்லாவிட்டாலும், தனது இரக்கம் நிறைந்த மனதாலும், தனது கனிவான  வார்த்தைகளாலும், தனது கையை நீட்டி பொருள் கொடுத்து உதவி செய்த அந்த குருவையும் சிறுவனையும் போல நாமும் நமது அன்பான வார்த்தைகளையும், ஊக்கமூட்டும் வழிகாட்டுதல்களையும், புன்னகையால் பூக்கும் அன்பு மலர்களையும், நமது ஆசிகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்வோம். சுயநலத்தில் இருந்து விடுதலை பெற்றவர்களாக இயேசுவைப்போல அன்பும் கனிவும் இரக்கமும் தாராளமாக நம்மில் வளர இடம் கொடுப்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...