புதன், 17 மார்ச், 2021

சான்று வாழ்வு சரித்திர வாழ்வு! (18.3.2021)

சான்று வாழ்வு சரித்திர வாழ்வு!

சான்று வாழ்வில் சரித்திரம் படைக்க துடிக்கும் அன்பு உள்ளங்களே!

இன்றைய நாளில் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் மக்கள் தமது வாழ்வில் திசைமாறிச் செல்வதையும், ஆண்டவர் அவர்கள் மேல் கோபம் கொள்வதையும், மீண்டும் அந்த மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவதையும் வாசிக்கின்றோம்.
           இன்றைய நற்செய்தி வாசகத்தில், "யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்து உள்ள செயல்களே அச்சான்று" என்று ஆண்டவர் இயேசு குறிப்பிடுகின்றார். (யோவான் 5: 36.). என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு என கூறிய இயேசுவின் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் கூற்றை உறுதிப் படுத்துவதாக அமைந்திருந்தன. இயேசுவின் வார்த்தைகளையும் அவரது வாழ்க்கையும் இணைந்து செல்லும் இயல்பை நாம் நேரிய உள்ளத்தோடு புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இயேசு தன்னுடைய பொதுவாழ்வுப் பயணத்தில் எத்தனையோ அருங்குறிகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தினார். அவை அத்தனையும் இயேசு இறைமகன் என்பதையும் தந்தையின் திருவுளத்தோடு அவர் ஒன்றுபட்டு செயலாற்றியதையும் தெளிவாக வெளிப்படுத்தின. ஆயினும் அவரில் நம்பிக்கை கொள்ளாத அவரது வல்லமையை உணராத பரிசேயர்,  எரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்தனர். ( மாற்கு 3 : 6.) என நாம் வாசிக்கின்றோம்.
        ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் அசாதாரணமான அவருடைய அற்புதங்களை மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு இரக்கச் செயலையும் இறையாட்சியின் காணக்கூடிய சான்றுகளாக கண்டனர். அவர் நிகழ்த்திய அறிகுறிகளில் அவருடைய இறை வல்லமையை கண்டு வியப்படைந்த அவர்கள் மிகச் சாதாரணமான அவருடைய செயல்பாடுகளிலும் பேச்சிலும் அவர் வெளிப்படுத்திய தாயன்பையும்,  தந்தையின் இரக்கத்தையும் உணர்ந்தனர். திறந்த உள்ளத்துடன் அவரது செயல்பாடுகளின் ஊற்றாகிய அவரது நேரிய, பரிசுத்த, அன்புநிறை உள்ளத்தை காணக்கூடிய பெற்றனர். இயேசு மனிதனாக மட்டுமல்ல இறைமகனாகவும் இவ்வுலகில் வாழ்ந்தார்.ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் தந்தை இறைவனுடன் இடைவிடாது இணைந்திருந்தால், அவரது பேரிரக்கத்தை நாம் சுவைத்து அவ்விரக்கம் நமது பேச்சிலும் பார்வையிலும் செயல்களிலும் ஒளிரும்படி வாழலாம். மனத்தாழ்மையுடன் உள்ளத்தில் தூயோராக வாழ நாம் முற்படும் போது நமது செயல்பாடுகளால் உண்மைக்கு சாட்சிகளாய் வாழ முடியும். ஏனெனில் கள்ளமற்ற கபடமற்ற அன்புடன் ஆற்றப்படும் ஒவ்வொரு சிறிய சாதாரண செயலும் அதன் பிறப்பிடம் தூய்மையான உள்ளம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்.

            இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் விண்ணகத் தந்தையின் இரக்கத்தை பகிர்ந்து கொள்வதே நமது அழைப்பு என்பதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம். இதை மனதில் கொண்டு இன்றைய நாளில் நாம் ஆற்றவிருக்கும் செயல்பாடுகள் மிகச் சிறியதாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றிலும் தந்தை இறைவனின் இரக்கமும் கருணையும் வெளிப்படும்படி வாழ்ந்து காட்டுவோம். நமது பார்வையால், இரக்கச் சொற்களால், நலிந்தவருக்கு ஆதரவு நல்கும் செயல்பாடுகளால் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை வெளிப்படுத்துவோம். நமக்குள் இருந்து நம்மை இயக்கும் ஆவியானவர் காட்டும் உண்மையின் பாதையில் உறுதியுடன் நடப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...