ஞாயிறு, 14 மார்ச், 2021

இன்று புதிதாய் பிறப்போம்... (15.3.2021)

இன்று புதிதாய் பிறப்போம்... 

நம்பிக்கையாளர்களே...! வணக்கம்.

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று புதிதாய் பிறந்தேன் என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் அனைவரும் நம்பிக்கையின் நாயகர்களாக பொது பிறப்பு அடைய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகளை நம்பிச் சென்ற ஒரு அரசுப் பணியாளர் தன் மகன் குணம் பெற்றதை அறிந்து ஆண்டவரின் வார்த்தைகளை மீது அதீத நம்பிக்கை கொள்கிறார். வார்த்தையை இறைவன் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.
இயேசு வார்த்தையானவர் இதையே யோவான் நற்செய்தி 1 அதிகாரம் 1-2 வசனங்களில்
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; 
வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
என்று நாம் வாசிக்கின்றோம்.

இயேசு மண்ணில் வாழ்ந்த போது இயேசுவின் வார்த்தைகள் பலருக்கு ஆறுதலையும் சுகத்தையும் நம்பிக்கையையும் துணிவையும் தந்தது நாம் இன்று பயன்படுத்தும் வார்த்தைகள் அடுத்தவருக்கு எத்தகைய உணர்வுகளை எத்தகைய ஆற்றலைத் தருகிறது என சிந்திக்க இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 

இந்த தவக்காலத்தில் நாம் இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை சீர்தூக்கிப் பார்த்து அதனை நமது வாழ்விலும் செயலாற்ற அழைக்கப்படுகின்றோம்.
அன்று இயேசுவுக்கு தவக்காலம் என்பது...
துன்பம் தூண்களாய்...
பாதைகள் முட்களாய்...
தோளில் சிலுவையாய்... 
கல்வாரி இலக்காய்...
வாழ்க்கை வரலாறாய்... இருந்தது.
ஆனால் இன்று நமக்கு தவக்காலம் என்பது...
சாம்பல் சின்னமாய்...
ஜெபிக்கும் உதடுகளாய்...
உதவிடும் கரங்களாய்...
வருந்தும் மனங்களாய்...
உயிர்ப்பின் உயர்வை நோக்கியர்களாய்...
இறைவனின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்ட  இறையடியார்களாய் மாறிட அழைப்பு தருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் முன்னுரைத்த புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைக்கின்றேன் என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இன்றைய நாளில் இருந்து நாம் நமது மனங்களில் புதிய நம்பிக்கை கொண்ட மனிதர்களாக பிறந்திட இறைவன் நம்மை அழைக்கின்றார். 

இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற பாடம். இன்றைய முதல் வாசகத்தில் புதிய விண்ணகம் புதிய மண்ணகம் என்ற  வார்த்தைகள் அக்காலத்து மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்தது போலவும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகள் அரசு அலுவலருக்கு நம்பிக்கையை தந்தது போல நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அடுத்தவருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரக்கூடிய வார்த்தைகளாக அமைந்திட வேண்டும் என இறைவன் நமக்கு இன்றைய நாளில் அறிவுறுத்துகிறார்.

பொதுவாகவே ஒரு நாளைக்கு ஆண்கள் 2000 வார்த்தைகளையும் பெண்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளையும் பேசுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் அடுத்தவர்க்கு நம்பிக்கையை தருகிறதா? என சிந்திப்போம். நம்பிக்கை தரும் வார்த்தைகளை நமதாக்கிக்கொண்டு இயேசுவின் சீடர்களாக, நம்பிக்கைக்குரிய மனிதர்களாக இம்மண்ணில் வலம்வர இறையருளை வேண்டுவோம். நம்பிக்கைக்குரிய மனிதர்களாகிட  பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று புதிதாய் பிறப்போம்... 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...