ஞாயிறு, 21 மார்ச், 2021

தீர்ப்பு.... (22.3.2021)

தீர்ப்பு.... 

அன்புக்குரியவர்களே வணக்கம்! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


மறுமலர்ச்சி என்ற ஒரு  பழைய திரைப்படம் ஒன்று உண்டு. அத்திரைப்படத்தில் கதாநாயகன் நல்லது செய்ய முயலும் போது அதை தவறாக புரிந்து கொண்டு ஒரு ஊரைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். இதனை கண்டு வெகுண்டெழுந்த கதாநாயகனின் ஊர் மக்கள் அனைவரும்  தங்கள் ஊரைச் சார்ந்த ஒரு நல்ல மனிதரை அவர்கள் அடித்தார்கள் என்று கூறி அந்த ஊரையே தீக்கிரையாக்குகிறார்கள். ஆனால் இதனை அறியாத கதாநாயகன் இச்செய்தி கேள்விப்பட்டு தனது ஊர் மக்களை கடிந்து கொள்கிறார். ஆனால் தீக்கிரையாக்கப்பட்ட ஊரைச் சார்ந்த எஞ்சிய நபர்கள் அனைவரும் கதாநாயகன் தான் இதற்கு காரணம் என கருதி அவரை கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்கிறார்கள். இப்படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் தனது ஊர் மக்களையும், தீக்கிரையான ஊர் மக்களையும், தான் யாருக்கு நல்லது செய்ய முயன்றாரோ அவர்கள்  முன் நின்று அவர் கேள்விகளை எழுப்புவார். நீங்கள் அனைவரும் தவறீழைதீர்கள் நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை மையமாகக் கொண்டு என் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தீர்கள்? என்று கேள்விகளால்  தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் செயல்களை  சுட்டிக் காட்டுவார்.  இன்று பல நேரங்களில் நமது தவறான முன் சார்பு எண்ணங்களும், நமது விருப்பத்திற்கு இணங்க மறுத்த அடுத்தவரின் செயல்களும் தான் பலரை குற்றவாளிகளாக நம்மை தீர்ப்பிட  வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் குற்றம் ஏதும் செய்யாத சூசன்னாவை சிலர் பொய்க்குற்றம் சாட்டி  குற்றவாளி என தீர்ப்பிடுகிறார்கள். 

இன்று தேர்தலை முன்னிட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்கு சேகரிக்கும் நபர்களுக்கு இடையே நாம் வாழ்கிறோம்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட மகதலா மரியாவை விபச்சாரத்தில் பிடிபட்டாள் என, அதுவும் கையும் களவுமாக பிடிபட்டவள் எனக் கூறி, இயேசுவின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். 

இயேசுவின் முன்பு மகதலா மரியா நிறுத்திவைக்கப்பட்டது இயேசுவை சோதிக்கும்  நோக்கு. இவர் இப்பெண்ணுக்கு  எச்சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை உற்று நோக்கும் வகையில் முன்னிறுத்துகிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், பல நேரங்களில், பல நிலைகளில், நாம் தீர்ப்பிடப்படுகிறோம் சூசன்னாவைப் போல. குற்றம் ஏதும் செய்யாத போது குற்றவாளிகள் ஆக்கப்படுகிறோம். மகதலா மரியாவைப் போல தனியாக ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட இயலாது. இருந்தபோதும் அவள் மட்டுமே கையும் களவுமாக பிடிபட்டவளாகிறார்.  இன்னொருவர் விட்டுவிடப்படுகிறார். 

இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் முறையற்ற வழியில் தீர்ப்பிடப்பட்டு இருப்போம்.  தவறு ஏதும் செய்யாமல் குற்றவாளிகளாக மாறி இருப்போம்.  நம்மோடு இணைந்து தவறிழைத்தவர்களே நாம் தவறிழைத்தவர்கள் எனக் கூறி நம்மை மட்டும் குற்றவாளியாக்குவார்கள். இச்சூழலில் எல்லாம் நாம் எப்படி செயல்பட வேண்டும்? நமது நம்பிக்கை என்பது யாரிடம் இருக்கிறது என்பதை ஆழமாக சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறோம்.  
இயேசுவும் தீர்ப்பிடப்பட்டவர் தான்.  குற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் தலைமை சங்கத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறார். குற்றமே தெரியாமல் குற்றவாளியாக கொண்டு போய் நிறுத்தியதால் அவருக்கு எதிராக குற்றங்களை தேடுகிறார்கள். பிறகு அவர்களே இரு  சாட்சிகளை உருவாக்குகிறார்கள்.  தலைமை குருவுக்கு முன்பாக இயேசு திருச்சட்டத்தை மீறுகிறார்.  இயேசு  எருசலேம் கோவிலை இடித்துவிடுங்கள்.  மூன்று நாளில் கட்டி எழுப்புகிறேன் எனக்கூறி எருசலேம் தேவாலயத்தை அவமதிக்கிறார் என ஆன்மீகம் சார்ந்த குற்றமாக அவர் மீது குற்றத்தை உருவாக்குகிறார்கள்.  அவருக்கு எதிரான சாட்சிகளை உருவாக்குகிறார்கள். பிலாத்துவின் முன் கொண்டு செல்லப்படும் போது அங்கு அரசியல் காரணமாக இவன் உரோமை அரசுக்கு வரி கட்டக்கூடாது என்கிறான். உரோமை அரசை எதிர்க்கிறான் என்று அரசியல் சார்பான  பொய் குற்றத்தை இயேசுவின் மீது சுமத்துகிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் பலரால் பலமுறை தீர்ப்பிடப்பட்டிருப்போம்.  பிறரின் தீர்ப்புகளை எல்லாம் கண்டு அஞ்சி விடக்கூடாது. பிறர் நம்மைப் பற்றிக் கூறக் கூடிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒன்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்  அல்ல.  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே மறுபரிசீலனைக்கு உட்பட்டது தான்.  நம்முடைய தீர்ப்பு என்பது நமது மனச்சான்றை பொறுத்தே அமைகிறது.  நாம் செய்கின்ற நல்லது கெட்டதுகளுக்கு நமது மனச்சான்றே நமக்கு முறையான தீர்ப்பு வழங்குகிறது.குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதுபோல, ஒரு அநீதியை இழைத்த பிறகு அவர் மனம் அடையும் வேதனையை அவரையன்றி வேறு எவரும் அறிய இயலாது. 
 நாம் வாழும் உலகத்தில் தவறான தீர்ப்புகளால் பலரை நாம் நையப் புடைத்திருக்கலாம்.  பலர் மீது பொய்க்குற்றம் சாட்டி பலரின் பெயரைக் கொடுத்து இருக்கலாம். ஆனால் இந்த தவக்காலம் நாம் பிறரை எப்படித் தீர்ப்பிடுகிறோம் என சிந்திக்க அழைப்புத் தருகிறது. இன்றைய வாசகங்களின் மையக் கருத்தும் அதுவாகத் தான் இருக்கிறது. இயேசுவைப் போல அடுத்தவரைத் தீீீீர்ப்பிடுவதற்கு முன்பாக நம்மை நாம் சுயபரிசோதனை செய்வோம்.  தவறுபவன் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்கான வழிகளைக் காட்டுவோம். பிறரை குற்றவாளிகள் எனக் கூறி அவர்களை பலரின் முன்பு குறுகிப்  போகச் செய்யாமல் அவர்கள் தவறை  அவர்களே உணர்ந்து கொள்ள வழி காட்டுவோம். நாம் யாரையும் தீீீர்ப்பிட வேண்டாம். அப்போதுதான் நாம் தீர்ப்புக்கு உள்ளாகாமல் இருக்க முடியும்.  அடுத்தவர் செய்கையை நேர்மறையாக பார்க்கப் பழகுவோம்.  பல நேரங்களில் நமது முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அடுத்தவரை பார்ப்பதனால் தான், ஒருவர் செய்கின்ற செயலில் இருக்கும் நன்மை தன்மையை உணர்ந்து கொள்ளாமல் அவரை குற்றவாளியாக மாற்றுகிறோம்.

 எனவே இன்றைய நாளின் வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி, தீர்ப்பிடாதே!  தீர்ப்பிடும் முன்பு நீ உன்னையே ஆய்ந்து அறிந்திடு!  என்ற செய்தியாகும். நம்மை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். நம்மை பலர் குற்றவாளிகள் எனத்  தீர்ப்பிட்ட தருணங்களை நினைத்து பார்ப்போம். நம்மை தீர்ப்பிட்டவர்களை மன்னிப்போம்.  நாமும் அடுத்தவரைத் தீர்ப்பிடாது நேர்மறை உணர்வோடு அனைவரையும் ஏற்றுக் கொண்டு இன்றைய நாளில் இறையருளை தொடர்ந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...