இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசு செய்கின்ற எல்லா செயல்களும் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன என்ற கேள்வியை இயேசுவை நோக்கி எழுப்புகிறார்கள். மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் தலைமை குருக்களும் ஆண்டவருடைய சட்ட திட்டங்களை எல்லாம் எடுத்துரைத்து, நெறி தவறுகின்ற மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் இப்பணியை செய்வதற்கு பதிலாக, தாங்கள் விரும்பும் வகையில், தங்களின் ஆதாயத்தை மையப்படுத்தியவர்களாக இறை வார்த்தைகளை விளக்கிக் கூறி, மக்கள் மத்தியில் இருந்து பலவிதமானவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய நிலையில் இருந்ததன் காரணமாகத் தான் இயேசு செய்கின்ற பணியைக் குறித்து அவர்கள் எப்போதும் கேள்வி எழுப்பக் கூடியவர்களாக, இருந்தார்கள். இவர்கள் எழுப்பிய கேள்விக்கு இயேசு நேரடியாக பதில் தரவில்லை. பல நேரங்களில் அவர்களுடைய கேள்விகளை அவர் கண்டும் காணாத நபராக, தன் செயல்கள் மூலமாக பதில் தரக்கூடியவராக இருந்திருக்கிறார் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என சொல்லித் தந்தவர் அல்ல. மாறாக தான் சொல்லியதை தன் செயல் வடிவத்தில் வெளிக்காட்டியவர் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் வருகைக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நமது செயல்களை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு உகந்த செயல்களை நமது செயல்களாக எடுத்துக்கொண்டு நாளும் வளரவும், பலரை ஆன்மீக வழியில் நல்வழிப்படுத்தவும் ஆற்றல் வேண்டியிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக