இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு அழகிய உவமையை சுட்டிக்காட்டுகின்றார். தந்தை முதல் மகனை பார்த்து வயலுக்குச் செல் என்கிறார். அவன் நான் செல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். பிறகு தன் மனதை மாற்றிக் கொண்டு, தந்தை சொன்ன இடத்திற்கு செல்லக் கூடியவனாக இருக்கிறான். இன்னொரு புறம் இரண்டாவது மகனோ தந்தை வயலுக்கு செல் என்று சொன்னவுடனே, "இதோ செல்கிறேன்" என்று சொன்னவன், செல்லாமல் இருக்கக் கூடியவனாக இருக்கிறான். ஒரு விதத்தில் தந்தையின் மனதை இந்த இரண்டு புதல்வர்களுமே நோகச் செய்து இருக்கிறார்கள். கடவுளுடைய பார்வையில் பல நேரங்களில் அவரின் பிள்ளைகளாகிய நாமும் நமது வாழ்வை இத்தகைய பிள்ளைகளைப் போலவே அமைத்துக் கொண்டு, கடவுளின் மனம் நோக்கக்கூடிய வகையில் நமது வாழ்வை பல நேரங்களில் அமைத்துக் கொள்வது உண்டு. நாம் கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுக்கின்றோம்.செவிகொடுக்கின்ற வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுக்க தவறியவர்களாகவே பல நேரங்களில் நாம் வாழுகின்றோம். ஆனால் நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போது, அவரது வார்த்தைகளுக்கு செவிகொடுக்கின்ற போது, நம்மை குறித்து மகிழக்கூடியவராக கடவுள் இருக்கிறார். அன்றைய யூத சமூகத்தில் சமய குருக்கள் ஒவ்வொருவருமே கடவுளின் வார்த்தைக்கு தாங்கள் கீழ்ப்படிவது போல சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கீழ்ப்படிய மறுத்தார்கள். பாவிகளாக கருதப்பட்ட பலரும் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுக்காதவர்கள் என்று சொல்லப்பட்ட நிலையிலும் கூட, தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டு மீண்டும் ஆண்டவரை நோக்கி செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆண்டவரின் பிறப்புக்கு ஆயத்தமாகக் கூடிய நாமும் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய, அவருக்கு உகந்த வாழ்வை வாழ தவறி இருப்போமாயின் நம்மை நாமே நெறிப்படுத்திக் கொண்டு, மீண்டும் ஆண்டவர் இயேசு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக