இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் ஒருவரே; அவரை நாம் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயா வலியுறுத்துவதை நாம் வாசிக்கக் கேட்டோம். நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அந்த இஸ்ரேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா, ஆண்டவர் ஒருவரே! அவரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட , என்னை தயக்கமின்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்று இயேசு குறிப்பிடுகின்றார்.
இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் இயேசுவை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். நமக்கு நன்மைகளை செய்தால் மட்டுமே இந்த இறைவனை நாடுவதையும், தீமைகள் துன்பங்கள் வருகின்ற போதும் இந்த இயேசுவை விட்டு புறம் செல்லுகின்ற
மனிதர்களாக நமது வாழ்வு அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.
அன்றைய காலகட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தயக்கம் இன்றி ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான் இந்த இயேசுவைப் பற்றி அறிக்கையிடுவதால் துன்பம் பரிசாக கிடைக்கும் என்பதை உணர்ந்த நிலையிலும் கூட, இந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு தாங்கள் ஏற்றுக்கொண்ட இயேசுவை அறிக்கையிட்டு, இவரின் வார்த்தைகளை வாழ்வாக்க முற்பட்டு பலரும் இந்த இயேசுவுக்காக உயிர் தியாகம் செய்தார்கள். இந்த நபர்களை எல்லாம் இந்த புனிதர்களை எல்லாம் நினைவு கூர்ந்து இன்றைய நாளில் இந்த இறைவார்த்தையின் பின்னணியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர் மீதான நம்பிக்கையில் இன்னும் அதிகமாக ஆழப்படவும், ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக