இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரமாகிய இன்று மகிழ்ச்சி என்ற மெழுகு திரியை ஏற்றியவர்களாக ஆண்டவரின் பிறப்பு நமக்கு எல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளவும், அந்த மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளவும், இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரின் வருகையை ஆவலோடு பலரும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் அடிமைப்பட்டிருந்த போது கூட, இறைவாக்கினர் எசாயா ஆண்டவர் வருவார் என்ற செய்தியினை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இந்த ஆண்டவர் வருகையின் போது எல்லாம் நிகழும். இதுவரை நடக்காத நிகழ்வுகள் அனைத்தும் நிகழும் என்று கூறக்கூடியவராக, பாலை நிலம் கூட சோலை வனமாக மாறும் என்பதை எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நாம் இன்றைய நாளில் ஆண்டவரின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். திருமுழுக்கு யோவான் வழியாக நல்லதொரு மனமாற்றத்தை பெற்றுக் கொண்டவர்களாக ஆண்டவரின் வருகையை நாம் ஆவலோடு நாடிட அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இவர்தான் மெசியாவா என்ற எண்ணத்தோடு இயேசுவை அணுகிய போது, நீங்கள் கண்டதையும் கேட்டதையும் யோவானிடம் அறிவியுங்கள் என இயேசு சொல்கின்றார். நோயுற்றோர் குணம் பெறுவதும், பார்வையற்றோர் பார்வை பெறுவதும், முடக்குவாதமுற்றோர் எழுந்து நடப்பதும் இவர்கள் பார்த்தார்கள். தாங்கள் பார்த்த செய்தியை யோவானிடம் அறிவித்தார்கள். அன்று இறைவாக்கினர் எசாயா வழியாக முன்னறிவிக்கப்பட்டது, ஆண்டவரின் நாளின் போது, அவரின் வருகையின் போது, பார்வையற்றோர் பார்ப்பர், கேட்கச் செவி இல்லாதோர் கேட்பர் என்று கூறப்பட்ட இறை வார்த்தைகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வில் நிறைவேறியதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம்.
ஆண்டவரின் நாள் அண்மையில் இருக்கிறது. நம்மை தேடி வரவிருக்கின்ற இந்த இயேசுவை நாம் இதயத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள நம்மை நாமே தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் வருகையை அன்போடு எதிர்நோக்கிட, ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக