இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவும், கடவுள் வகுத்திருக்கின்ற திட்டங்களை உணர்ந்து கொண்டு, அந்த திட்டங்களுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய, நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம் ஆண்டவரை முழுமையாக நம்புகிற போது பலவிதமான நன்மைகளை நமது வாழ்வில் நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இறைவாக்கினர் எசாயா இஸ்ராயேல் மக்களுக்கு முன்னறிவித்ததை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த ஆண்டவரால் கூடாத காரியம் எதுவும் இல்லை. இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிற போது பலவிதமான நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு யோவானின் வாழ்வை சுட்டிக் காண்பித்து, இந்த யோவானை போல நீதியோடும், நேர்மையோடும், துணிவோடும், ஆண்டவரின் வார்த்தையை அறிக்கையிடுகின்றவர்களாக இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தைக் கற்று தருகின்றார். பலரும் அதைக் கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, திருமுழுக்கு யோவானிடம் சென்று நல்லதொரு மனமாற்றத்தை அடைந்தவர்களாக, திருமுழுக்கு பெறுகிறார்கள்.
ஆனால் பலரும் இந்த கடவுளின் திட்டத்தை புறம் தள்ளியவர்களாக, தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள்.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். நமக்கென கடவுள் வகுத்துள்ள திட்டங்களை எல்லாம் கண்டுணர்ந்து கொண்டு அத்திட்டத்தின் அடிப்படையில் கடவுளை நாடிச் செல்கின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோமா அல்லது கடவுளின் வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டு கேட்டுவிட்டு நகர்ந்து விடக் கூடிய மனிதர்களாக இருக்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு நாளும் ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிக்க ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக