இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளிலே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை உலகெங்கும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நல்ல நாளிலே உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரித்தாக்குகிறேன். கடவுள் எதற்காக மனித வடிவம் எடுத்தார் என்ற கேள்வியை இதயத்தில் எழுப்புகிற போது கடவுள் மனிதனை இந்த சமூகத்தில் அன்போடும் பகிர்வோடும் மகிழ்ந்திருப்பதற்காக உருவாக்கினார்.
ஆனால் மனிதன் தன் மனம் போன போக்கில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு, அன்பையும் பகிர்வையும் மகிழ்வையும் குலைத்த மனிதனாக, தன்னுடைய சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்திய மனிதனாக நெறி தவறி வாழுகின்ற போது, எத்தனையோ நபர்கள் வழியாக வாழ்வை நெறிப்படுத்துவதற்கான அழைப்பை தந்த இறைவன், இன்றைய நாளில் மனித வடிவம் எடுத்து நம்மில் ஒருவராக வந்து, நம்மோடு உரையாடி, உறவாடி, நம் வாழ்வை நெறிப்படுத்துகின்றார். நம்மை நெறிப்படுத்தி கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம்மை மாற்றுவதற்கு கடவுளே மனித வடிவம் எடுத்து, நம்மைத் தேடி வந்திருக்கிறார். நம்மைத் தேடி வந்த ஆண்டவரை கண்டு கொள்ளவும், அவரை பிரதிபலிக்கின்ற மனிதர்களாக நாம் மாறிடவும், இந்த நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
பிறந்திருக்கின்ற பாலன் இயேசு உங்களையும் என்னையும் ஆசீர்வதித்து, நம் வழியாக இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்களை முன்னெடுப்பார். கடவுளின் திட்டத்திற்கு நம்மை முழுவதும் கையளித்தவர்களாக, இந்த நாளிலே இணைந்து பயணிப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்வோடு மற்றவருக்கு அறிவிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக