இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
அன்று ஒருநாள் அன்னா என்ற பெண்மணி ஆண்டவரின் திரு முன்னிலையில் வந்து நின்று, தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பதை சொல்லி ஆண்டவரிடத்தில் அழுது புலம்பிய போது, தூரத்திலிருந்து அதை கவனித்துக் கொண்டிருந்த ஏலி என்ற குரு கடவுளின் முன்னிலையில் வந்து குடித்துவிட்டு நிற்கிறாய் என்று சொல்லி அந்த பெண்ணின் வேண்டுதலை அவர் கேள்விக்கு உட்படுத்திய போது, குடித்துவிட்டு வரவில்லை மாறாக, தனக்கு குழந்தை இல்லை என்பதால் இந்த கடவுளிடத்தில் எனது உள்ளத்தின் குமுறல்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பெண்மணி சொல்லி, தனக்காக இறைவனிடத்தில் மன்றாடிய போது, அவர், உரிய காலத்தில் கடவுள் உன் மன்றாட்டுக்கு செவிசாய்ப்பார் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கின்றார்.
அதற்கேற்றார் போல சில நாட்களுக்குப் பிறகாக அந்த அன்னா என்ற பெண்மணி ஒரு குழந்தையை பெற்றெடுத்து, கடவுள் தனக்கு செய்த நன்மையை நினைவுகூர்ந்த ஒரு பெண்மணியாக, கடவுளுக்கு நன்றி சொல்ல மீண்டும் அதே ஆலயத்திற்கு வந்து, ஆண்டவர் தனக்கென கொடுத்த அந்த மகனை கடவுளின் பணிக்கென அர்ப்பணிப்பதைத்தான், இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, அன்னை மரியா கடவுளை போற்றி புகழ்கின்றார். எத்தனையோ பெண்கள் ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்த போது, கடவுள் அன்னை மரியாவை தேர்ந்தெடுத்தார். இந்த மரியாவின் வழியாக இந்த அகிலத்திற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்தார். மரியா கடவுள் ஆயிரம் பேருக்கு மத்தியில் தன்னை தேர்ந்தெடுத்ததை குறித்து மகிழக்கூடியவராக, கடவுள் தன்னை உயர்த்தியதை எண்ணி கடவுளைப் போற்றி புகழக் கூடியவராக இருப்பதை எடுத்துரைப்பதாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருப்பதை நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகங்கள் இரண்டுமே நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், நமது வாழ்வில் எத்தனையோ நேரங்களில் நாம் கடவுளிடத்தில் கண்ணீரோடு மன்றாடிய போதெல்லாம், அவர் நம் மன்றாட்டுக்கு பதில் தந்திருக்கிறார். தகுந்த நேரத்தில் நமது தேவைகளுக்கெல்லாம் துணை நின்று, தேவைகளை நிவர்த்தி செய்த அந்த இறைவனை நன்றியோடு நினைவு கூர, இன்றைய நாள் இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நன்றி மறவாத மனிதர்களாக இன்றைய நாளில் கடவுள் செய்த எல்லா விதமான நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லுவோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக