இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் திருவருகை காலத்தினை துவங்குகிறோம். நம்பிக்கை என்ற ஒளியை ஏற்றி பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆயத்தத்தோடு எப்போதும் விழிப்பாய் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு தருகின்றன. ஆண்டவர் இயேசுவை இல்லங்களில் பிறக்கச் செய்கின்ற மனிதர்களாக மட்டும் நாம் இருந்து விடாமல், நமது இதயத்தில் பிறக்கச் செய்வதற்கான வழிகளை கண்டுணர்ந்து கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாம் வாழ்வதற்கான அழைப்பினை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார். எப்போது வருவார் என தெரியாத வண்ணம் திடீரென ஒரு கள்வனைப் போல ஆண்டவரின் நாள் வரும். அந்த நாளுக்கு ஏற்ற வகையில் ஆண்டவரை எதிர்கொள்ள நீங்களும் நானும் தயார் நிலையில் நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக இறைவன் எடுத்துரைக்கின்றார்.
நோவாவின் காலத்தில் மக்கள் பாவங்கள் பல செய்து கொண்டிருந்த போது அழிவு நேரப் போகிறது என்பதை எடுத்துரைத்த போது கூட, தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள தவறிப் போனவர்களாக இருந்தார்கள். கடவுளின் வார்த்தையை கேட்டு தனக்கென ஒரு பேழையை வடிவமைத்த நோவாவை கூட அவர்கள் பல நேரங்களில் கேலி செய்கின்ற மனிதர்களாகத் தான் இருந்து சென்றார்கள். ஆனால் ஆண்டவர் சொன்னது நிறைவேறிய நாளின் போது மற்றவர்கள் அழிவுற்றபோது நோவாவும் அவரது குடும்பமும் காத்துக் கொள்ளப்பட்டது. நாம் நமது வாழ்வை நெறிப்படுத்தி க் கொண்டு இயேசு கிறிஸ்து நமது இதயத்தில் பிறப்பதற்கு நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொண்டு ஆண்டவரின் நாளுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக