இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு செக்கரியாவுக்கு அறிவிக்கப்படுகின்றது. இந்த செக்கரியா என்ற மனிதர் ஆலயத்தில் பணி செய்கின்ற நபராக இருக்கின்றார். தன் முன்னிலையில் வந்து நிற்பது ஆண்டவரின் தூதர் என்று அறிந்த நிலையிலும், அவர் சொல்லுகின்ற வார்த்தையில் கலக்கம் கொண்ட மனிதராக இருக்கின்றார். அதன் விளைவாகவே கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் வரை இவரின் வாய் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் பேச்சற்ற மனிதராக இருக்கின்றார்.
கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது அவர் மீண்டும் பேசத் தொடங்கியவராய் கடவுளைப் போற்றி புகழ்கின்றார். கடவுளின் வார்த்தைகளின் மீது நாம் ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் வளர வேண்டும் என்பதைத்தான் இந்த இறை வார்த்தை பகுதியில் இருந்து உள்வாங்கிக் கொள்ள நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம். கடவுளின் வார்த்தைகள் ஆற்றல் வாய்ந்தவை என எபிரேயர் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், இந்த வார்த்தைகளின் வல்லமையை உணர்ந்தவர்களாக, நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான ஆற்றலை வேண்டுவோம். இந்தக் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வாயிலாக நாம் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக இன்றும் என்றும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக