இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த்திரு அவையானது முதல் மறைச்சாட்சியான திருத்தொண்டர் ஸ்தேவான் அவர்களை நினைவு கூர்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணியினை செய்வதற்காக அழைக்கப்பட்ட ஒவ்வொருவருமே படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவிக்கின்ற நபர்களாக மாறிய போது பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் தங்கள் வாழ்வில் சந்தித்தார்கள். அதிலும் குறிப்பாக கிரேக்க மொழி பேசக்கூடிய பெண்களுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் உருவானது. பலதரப்பட்ட மக்கள் இயேசுவின் பெயரால் இணைந்திருந்த சூழ்நிலையிலும், கிரேக்க பெண்கள், அதிலும் கணவனை இழந்த நிலையில் இருந்த அந்த கைம்பெண்கள் முறையாக கவனிக்கப்படவில்லை என்ற பிரச்சனையானது திரு அவையில் உருவான போது, அப்போது இருந்த திருத்தூதர்கள் எல்லாம் ஒன்று கூடி கடவுளின் துணையோடு தூய ஆவியின் அபிஷேகம் பெற்ற பலரைத் தேர்ந்தெடுத்து திருத்தொண்டர்களாக அவர்களை நியமித்து, பந்தியில் பரிமாறுகின்ற பணியினை அவர்களுக்கு வழங்கினார்கள். அப்படி அவர்கள் தேர்ந்த திருத்தொண்டர்களுள் ஒருவர் தான் புனித ஸ்தேவான்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி ஆணித்தரமாக எடுத்துரைக்கக் கூடிய ஒரு மனிதனாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஆண்டவர் ஆலயத்தில் உறைந்திருப்பவர் அல்ல; மாறாக அவர் இந்த அகிலம் முழுவதிலும் பரந்திருப்பவர் என்பதை துணிவோடு எடுத்துரைத்தார். இந்த இயேசுவின் செய்தியை அறிவிப்பதால் எத்தனையோ இடர்பாடுகளை பலர் சந்தித்த போதும், நீங்கள் அவர்களை எத்தனை இடர்பாடுகள் தந்தாலும் கடவுள் அவர்களை காத்தருள்வார். நாம் அவர்களை தண்டித்தலாகாது. மாறாக, அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இயேசுவின் நற்செய்தியை அறிவித்தவர்கள் சார்பாக துணை நின்ற ஒரு மனிதர். அது போலவே தன்னுடைய வாழ்நாளில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார். உயிர்த்தவர் விண்ணகத்தில் தந்தையின் வலப்பக்கம் இருக்கிறார் என்று ஆணித்தரமாக பல தரப்பட்ட மக்களுக்கும் துணிவோடு நற்செய்தி அறிவித்தார். அதன் விளைவாக சுற்றி இருந்தவர்களால் இவன் மோசேயின் சட்டத்தை மீறுகிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். உயிர் விடுகின்ற நேரத்திலும் கூட தான் ஏற்றுக்கொண்ட இந்த ஆண்டவர் இயேசுவை பிரதிபலிக்கின்ற மனிதனாக, தந்தையே! இவர்களை மன்னியும் என்று சொல்லி அவர்களுக்காக மன்னிப்பு வேண்டி தனது இன்னுயிரை தியாகம் செய்தார். திரு அவையின் முதல் மறைசாட்சியான இந்த ஸ்தேவானை நினைவு கூர்கின்ற இந்த நன்னாளிலே நாம் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கவும், அவரது வார்த்தைகளை துணிவோடு எடுத்துரைக்கவும் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக