மாசில்லா குழந்தைகள் தினம் ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த் திருஅவையானது மாசில்லா குழந்தைகளை நினைவு கூர நமக்கு அழைப்பு தருகிறது. ஆண்டவர் இயேசு பிறந்தபோது இயேசுவின் பிறப்பு ஏரோது அரசனுக்கு அறிவிக்கப்படுகிறது. ஏரோது அரசன் தன்னை மிஞ்சும் வகையில் தனக்கு எதிராக ஒரு குழந்தை பிறந்திருப்பதாக எண்ணி கலங்கினான். தன் கலக்கத்தின் விளைவாக குழந்தைகளை திட்டம் தீட்டினான். அதன் விளைவாக பல குழந்தைகளை கொல்ல ஆணையிட்டான். அவ்வகையில் கொல்லப்பட்ட பல குழந்தைகளை, இயேசுவுக்காக மறைசாட்சிகளாக மாறிய மாசற்ற குழந்தைகளை நினைவு கூரவே திருஅவை இந்த நாளை நமக்கு தந்திருக்கிறது.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இந்த மாசற்ற குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் இந்த மாசற்ற குழந்தைகளின் திருவிழாவானது நமக்கு எத்தகைய பாடத்தை தருகிறது என சிந்திக்கின்ற போது, இன்று ஆங்காங்கே மாசற்ற குழந்தைகளின் இழப்பானது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை. தன்னை முன்னிலைப்படுத்திய வாழ்வில் மனிதன் சிசு என பாராமல் சிறுவயதிலேயே அவர்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
மற்றவர் முன்னிலையில் தன் குழந்தையை அறிமுகப்படுத்த அஞ்சுகின்ற பெற்றோர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். குறைகளோடு பிறக்கின்ற குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்று எல்லோரிடமும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. குறையோடு ஒரு குழந்தை இருப்பதாக உணர்கின்ற போது அக்குழந்தையை என் மண்ணிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே அழித்துவிடக் கூடிய சூழலும் இச்சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்னும் குறிப்பாக மதுரைக்கு அருகில் இருக்கக்கூடிய உசிலம்பட்டி போன்ற சில கிராமங்களில் இன்றும் பெண் குழந்தை என அறிந்து அவர்களை அழித்துவிடும் சூழல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சுசு விலையை அவர்களை அழித்து விடுவதற்கான சூழல் அங்கெல்லாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடவுள் கொடுத்த விலை மதிப்பற்ற செல்வம் ஆகிய நமது குழந்தைகளை பாதுகாக்கவும் பேணி வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். நமது எண்ணங்களையும் விருப்பங்களையும் திணிப்பதற்கான இடமல்ல குழந்தைகள். குழந்தைகள் கடவுளின் நற்செய்தியை இந்த உலகிற்கு தாங்கிக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் குறைகளோடு இருந்தாலும் அழகற்று இருந்தாலும் அவர்கள் கடவுளின் விலைமதிப்பற்ற பரிசு. இந்தக் குழந்தைகளை பாதுகாக்கவும் பேணி வளர்க்கவும், நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனை செய்வதற்கு பதிலாக இன்று பல இடங்களில் சிறு வயதிலேயே அவர்களை அழித்து விடுவதற்கான சூழல் இன்றும் தொடர்கிறது. குறிப்பாக போர் என்று வருகின்றபோது அறநெறி மையும் மீறி பல சிறு குழந்தைகள் கொல்லப்படுகின்ற நிகழ்வு இன்றும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது.
இந்த மாசற்ற குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த நாளில் நாம் நமது குழந்தைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நமது குழந்தைகளை இறைவன் வழி நடத்தியதற்காக நன்றி சொல்வோம். கடவுள் நமக்கு கொடுத்த விலைமதிப்பற்ற பரிசாகிய நமது குழந்தைகளுக்காக நன்றி சொல்வோம். இந்த குழந்தைகளை அன்போடும் அக்கறையோடும் பேணி வளர்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த குழந்தைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழலாம். நான் அறியாத அனைத்தையும் கூட எனது குழந்தை அறிந்திருக்க வேண்டும் என எண்ணலாம். ஆனால் நமது எண்ணங்களை திணிப்பதற்கான இடம் குழந்தைகள் அல்ல என்பதையும், உமது உள்ளத்தில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்று பல நேரங்களில் அடுத்தவரின் எண்ணங்களை நமது எண்ணங்களை திணிப்பதற்கான இடமாகத் தான் பலர் தங்கள் குழந்தைகளை கருதுகிறார்கள்.
ஏட்டில் இருப்பதெல்லாம் இதயத்துக்குள் பதிய வைப்பது மட்டுமல்ல கல்வி. மாறாக ஒரு குழந்தையின் உள்ளிருப்பதை வெளிக்கொண்டு வருவது உண்மையான கல்வி என்பார்கள். சிறுபிள்ளைகளை நாம் உற்று நோக்குவோமானால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். அன்றெல்லாம் ஒரு சிறு குழந்தை இருக்கிறது என்றால் அந்த குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்த்தோம். விளையாடுவதற்கு அந்த குழந்தைக்கு நாம் பொம்மை வாங்கிக் கொடுத்தோம். அந்த பொம்மைகளை அவர்கள் தங்களைப் போலவே கருதினார்கள். அந்த பொம்மைக்கு தலை சீவுவார்கள், உணவு ஊட்டுவார்கள், குளிப்பாட்டுவார்கள். அதனை எப்பொழுதும் தங்கள் அருகில் வைத்துக் கொள்வார்கள். அந்த பொம்மைக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் வருத்தம் கொள்வார்கள். அந்த பொம்மையை காணவில்லை என்றால் துடிதுடித்து கதறுவார்கள். இத்தகைய உணர்வு எப்படி ஒரு குழந்தைக்கு வந்தது? என சிந்திக்கின்ற போது, அந்தக் குழந்தையானது இத்தகைய பண்புகளை தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும், ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் மறுக்கப்படாத உண்மை. நாம் ஒரு குழந்தையை எப்படி பராமரிக்கிறோமோ, அதனை அக்குழந்தையும் வெளிப்படுத்துகிறது. அதன் விளைவுதான் பொம்மை மீதான நாட்டங்கள்.
ஆனால் இன்று வியாபார உத்திகள், கவர்ச்சிகள், குழந்தைகளின் வாழ்வை சீரழிக்க தொடங்கியிருக்கிறது. பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதற்கு பதிலாக, அலைபேசியை கொடுத்துவிட்டு நாம் நமது வேலைகளில் மூழ்கி கிடக்கின்றோம்.
மாசற்ற குழந்தைகள் பெரு விழாவினை கொண்டாடுகின்ற இந்த நாள் நாம் நமது குழந்தைகளோடு கொண்டிருக்கின்ற உறவையும் நமது குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுள் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசாகிய குழந்தைகளை அன்போடும் அறத்தோடும் வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். குறைகளோடு இருந்தாலும் சரி, இறைவன் கொடுத்த குழந்தைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம். குழந்தைகள் கண்டு வியக்கின்ற முதல் உலக அழகி யார் என பார்க்கின்ற போது அது தன் தாயாகத் தான் இருக்க முடியும். பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளை பேணி வளர்க்க, இறைவன் கொடுத்த குழந்தைகளுக்காக நன்றி கூற, நமது குழந்தைகளுக்காக இணைந்து இத்திருப்பலி வழியாக தொடர்ந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக