சனி, 4 டிசம்பர், 2021

மாற்றத்தை நோக்கி...(5.12.2021)

மாற்றத்தை நோக்கி...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 


 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகின்ற செய்தி என்னவென்று பார்க்கின்ற போது, நாம் மனம் மாறவும் நற்செய்தியை நம்பவும்,
அதனை அறிவிக்கக் கூடியவர்களாக இருக்கவும் இறைவன் அழைப்பு தருகின்றார்.  

ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

 உங்களுடைய வருமானத்தில் அதிகமான தொகை தற்பொழுது எங்கு சென்று கொண்டிருக்கிறது என ஆராய்ந்து பார்த்தால் அது மதுக்கடைக்கு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. 

            சில பெரிய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் சேர்த்து வைத்த லஞ்சப் பணம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று பார்த்தால் அதுவும் மதுக்கடைக்குத் தான் சென்று கொண்டிருக்கிறது.  

          மது உங்கள் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த மது பழக்கத்திலிருந்து நீங்கள் விலக வேண்டும். உங்களது வாழ்வுக்கான முன்னேற்ற பாதையினை நீங்கள் கண்டு கொள்ள வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிகுந்த ஆர்வத்தோடு மது ஒழிப்பு பற்றி உரையாற்றினார். 

               அந்த அரங்கத்தில் இருந்து அந்த சமூக ஆர்வலர் உரையாற்றிய பின் வெளியே வந்தவுடன் ஒரு தம்பதியினர் அவரை சந்தித்தனர். அவரை சந்தித்து அவருக்கு நன்றி கூறினார். அவரது கருத்துரைகளை கேட்ட பின்பு அவர்களுக்கு பல்வேறு தெளிவுகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். 

       உங்கள் ஊரில் எவரும் இனிமேல் மதுக் கடைக்குச் செல்ல மாட்டார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்று அந்த சமூக ஆர்வலர் அந்த தம்பதியினரை பார்த்துக் கூறினார்.  உடனே அந்த தம்பதியினர், ஐயா நாங்கள் என்ன தொழில் தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அதிகமான லஞ்சப் பணமும் வருமானத்தில் பதியும் வருவது மதுக்கடையில் தான் என்று நீங்கள் கூறினீர்கள். ஒரு மதுக்கடை ஆரம்பிப்பதே எங்களது வருமானத்தைப் பெருக்குவதற்கான சரியான வழி என கண்டு கொண்டோம். நாங்கள் ஒரு மதுக்கடை ஆரம்பிக்கப் போகிறோம் என்று கூறினார்களாம். 

       கூறப்பட்ட கருத்தின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளாத மக்களாகத் தான் இன்று சமூகத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அனுதினமும் நாம் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம். கேட்கக்கூடிய வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களை விட, கேட்டு விட்டு நகர்ந்து செல்லக்கூடிய மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள். 
ஆனால்....
            கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயர் 4:12


இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை  அறிந்துகொள்ளவும்... மனம் மாறி அறிந்துகொண்ட இறைவார்த்தையை வாழ்வாக்கவும்.... வாழ்வாக்குகின்ற இறை வார்த்தையை அடுத்தவருக்கு அறிவிக்கவும்...அழைப்பு தருகிறார்.


இந்த பணியை செய்வதற்காகவே திருமுழுக்கு யோவான் இவ்வுலகிற்கு வந்தார்.  அவரைக் குறித்தே இன்றைய நாள் வாசகங்களில் நாம் வாசிக்க கேட்டோம்.

 திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்தார். அறிவிக்க அடுத்தவரை தூண்டினார். அதே சமயம்,  அவர் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கக் கூடியவராக இருந்தார். அதனை நம்ப கூடியவராக இருந்தார். அந்த இறைவார்த்தையின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார்.  இன்று நாமும் அவ்வாறு இருக்கவே அழைக்கப்படுகிறோம்.  

நடப்பதெல்லாம் நடக்கட்டும்! 
எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை! 
எந்த ஒரு நன்மையும் எந்தவித தீமையும் என்னை தொட்டால் மட்டுமே அதற்கு பதில் தரக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் பல நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட வாழ்வு என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்து, விரும்பிய ஒரு வாழ்வு அல்ல. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து,   அடுத்தவர் மீது அக்கறை கொள்ளக் கூடிய ஒரு வாழ்வினை வாழவே நமக்கு அழைப்பு விடுத்தார். அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது, அடுத்தவரை அன்பு செய்யக் கூடியவராக இருந்தார். ஏழை எளியவர், படித்தவர், படிக்காதவர், என அனைவரையும் தேடிச் சென்று
 அனைவருக்கும் நலமானதை செய்தார்.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நாமும் நமது வாழ்வில்,  அவரைப் போலவே அனைவரையும் தேடி தேவையில் இருப்பவர்களின் தேவைகளை கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருப்பதற்கு இறைவன் அழைப்பு தருகின்றார். 
         
 ஒவ்வொரு வருடமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூருகிறோம். 

   ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது நமக்கு தருகின்ற முக்கியமான செய்தி,  அடுத்தவர் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் பிறப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருந்தது. 


                
பலதரப்பட்ட உலக இச்சைகளுக்கு அடிமையாகிப் போயிருந்த இந்த உலகத்தில்.... 
நீதியும் நேர்மையும் கேள்விக் குறியாக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தில்... 
ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டக் கூடிய மனிதனாக உலக இச்சைகளுக்கெல்லாம் தன்னை உட்படுத்திக் கொள்ளாத ஒரு மனிதனாக வாழ்ந்து வந்தார். 

             அவ்வாறு வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை தான் இன்று நாம்  பின்பற்றுகிறோம். மனிதனாக இம்மண்ணில் வந்த
இறைவனால் இது சாத்தியம் என்றால் மண்ணில் வாழுகின்ற நம் ஒவ்வொருவராலும் அது சாத்தியம்... நாம் நம்மீது  இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மைகளை அகற்றி, நம்மால் இயலாது என்று எண்ணக் கூடிய செயல்பாடுகளை எல்லாம் களைந்துவிட்டு, ஆண்டவர் இயேசுவைப் போல இந்த சமூகத்தில் நாம் வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக தான் இந்த  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது அமையவிருக்கிறது. 

எனவே ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர் நோக்குகின்ற நாம் நமது உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டவர்களாக நமது செயல்களை சீர்தூக்கி பார்த்து, நம் ஆண்டவர் இயேசுவின் விழுமியங்களின் படிதான்  இச்சமூகத்தில் வாழுகின்றோமா? என்பதை சிந்தித்தவர்களாக, அவ்வாறு வாழ மறந்த தருணங்களுக்காக
மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம்.  இறைவன் நமது குற்றங்களை மன்னிப்பார். இனி வருகின்ற காலங்களில் நாம் நலமோடு வாழ இறைவன் இந்த புதிய நாளை நமக்கு தந்திருக்கிறார்.

இன்றைய முதல் வாசகம் இரண்டாம் வாசகம் இதே கருத்தைத் தான் நமக்கு வலியுறுத்துகின்றன.
நமது பழைய தவறான வாழ்விலிருந்து மாற்றம் பெற்றவர்களாக ஆண்டவரே காட்டுகின்ற புதிய பாதையில் பயணம் செய்ய கூடிய மக்களாக நாம் வாழ அழைப்பு தருகின்றன.


நல்லதொரு    மனமாற்றத்தை அடைந்தவர்களாக பிறக்கவிருக்கும்  ஆண்டவரை ஆவலோடு எதிர்நோக்கவும், நமது சொல்லையும் செயலையும் சீர்படுத்திக் கொண்டு இச்சமூகத்தில் பயணிக்கவும், இன்று இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, திருமுழுக்கு யோவானின்
 வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நற்செய்தியை நம்பக்கூடிய மனிதர்களாக மாறிட,  நற்செய்தியின் பொருட்டு நமது பாவ வாழ்விலிருந்து மனம் மாறி, ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக மாறிட, அடுத்தவரின் மீது பரிவு கொள்ளக் கூடிய மக்களாகிட, இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றது. 

        இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நற்செய்தியை வாழ்வாக்கிட முயலுவோம். அப்போது
 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் ″ . 
லூக்கா 3:6
என்பதற்கேற்ப நாம் கடவுளின் அருளை கண்டு கொள்ள முடியும். அதன் வழியாக ஆண்டவர் இயேசுவை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க இறைவனின் அருளை இணைந்து வேண்டுவோம்.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...