இறைவனது திட்டத்தை அறிவோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் தரும் பாடங்கள் ஏராளம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக கடவுள் ஆகாசு அரசனோடு உரையாடுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கபிரியேல் வானதூதர் வழியாக மரியாவுக்கு இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்படுகிறது.
இதைப் போலவே ஒவ்வொரு நாளும் நமக்கு இறைவார்த்தையின் வாயிலாக பல விதமான வாழ்க்கை பாடங்களை இறைவன் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆண்டவரின் உரையாடலுக்கு செவிகொடுத்து நாம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.
எப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில் கபிரியேல் வானதூதர் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு முன்னறிவித்த போது உள்ளம் கலங்கியவராய், "இது எப்படி நிகழும்?" என அன்னை கேள்வி எழுப்பினாரோ, அது போல பல நேரங்களில் நாம் இறைவனது திட்டத்தை உணர்ந்து கொள்ளாது, கேள்வி எழுப்பக் கூடியவர்களாக இருக்கிறோம்.
மரியாவின் கேள்விக்கான பின்னணி எது எனப் பார்க்கின்ற போது அன்றைய சமூகமான ஆணாதிக்க சிந்தனை நிறைந்த அந்த சமூகத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு முன்னதாக கருவுற்று இருக்கிறார் என அறிந்தால், அந்த பெண்ணுக்கு இழைக்கப்படக் கூடிய கொடுமைகள் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே மரியாவின் உள்ளத்தில் அந்த கலக்கம் தோன்றினாலும், உரையாடுவது ஆண்டவரின் தூதர் என்பதை உணர்ந்து கொண்டவராய் இறைவனது திட்டத்திற்கு தன்னை முழுமையாக கையளிக்கக் கூடிய ஒரு பெண்மணியாக, "நான் ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" எனக் கூறி தன்னை தாழ்த்தி இறைவனது திட்டத்தை நிறைவேற்ற இசைவு தெரிவித்தார் இந்த அன்னை மரியா. நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடுகிறார். இறைவனது உரையாடலை கேட்டாலும் பல நேரங்களில் நமது இறை வேண்டுதல் என்பது, "என் விருப்பப்படி நிகழட்டும்" என்பதாக இருக்கிறதே தவிர, "உம் விருப்பப்படி நிகழட்டும்" என்பதாக இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
கடவுள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, நமக்கு வேண்டியதை கேட்கின்ற நாம் அவர் நமக்குத் தருகின்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, அனைத்து விதமான சூழல்களிலும் அவரது திட்டத்தை நிறைவேற்றக் கூடிய மக்களாக நாம் மாறிட இறைவனிடத்தில் அருள் வேண்டிட, வலுப்பெற்றிட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. இறைவன் நமது வாழ்வில் அனுமதிக்கின்ற எல்லா விதமான இன்ப துன்பங்களையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, அதை இறைவனின் திட்டம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், அத்திட்டத்திற்கு இசைவு தெரிவித்து வாழத் துவங்குவோம். அன்னை மரியாவை வழிநடத்திய அதே இறைவன் நம்மையும் வழிநடத்துவார். படைத்த இறைவன் நம்மையும் பாதுகாத்து வழிநடத்துவார் என்று நம்பிக்கையோடு பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொண்டு அன்பு செயல்களாலும் இரக்கச் செயல்களாலும் இந்த உலகத்தை மகிழச் செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் இறைவனது திட்டத்தை அறிந்து அதற்கு செயல்வடிவம் தரக்கூடியவர்களாய் இணைந்து ஜெபிப்போம் இந்த திருப்பலியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக