வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்து பிறப்பு விழா - 2021

கிறிஸ்து பிறப்பு விழா - 2021
திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை கொண்டாட ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் இந்த நாளில் மகிழ்ச்சியோடு இந்த கல்வாரி பலிக்கு அழைப்பதில் மகிழ்கின்றேன்.
ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.  ஆனால் இன்று பிறக்கவிருக்கும் நம் பாலன் இயேசுவின் பிறப்பு இந்த அகிலத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகிறது.

பிறக்க உள்ள பாலன் இயேசு நமது வாழ்வில் நாம் இழந்துபோனவைகளை எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் புது பிறப்பாக இன்று அமைகின்றார்.  

இவரது பிறப்பு நமது வாழ்வில்  கொடிய நோயின் தாக்கத்தினால் நலிவுற்ற நமது நம்பிக்கையை புதுப்பிக்க கூடியதாகவும். 

மறைந்து போன நமது மனித நேயப் பண்புகளை மலரச் செய்ய கூடியதாகவும்.

இழந்துபோன அமைதியை மீண்டும் நமது குடும்பங்களில் கொண்டுவரக் கூடியதாகவும்.

தனித்து விடப்பட்ட நமது வாழ்வில் நம்மைத் தேடி வரும் இறைவனின் அன்பின் ஆற்றலை நமக்குள் விதைக்க கூடியதாகவும் உள்ளது.


 "நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்". 
(எசேக்கியேல் 36:26) என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறக்க உள்ள பாலன் இயேசு நமக்கு புதிய இதயத்தையும் புதிய ஆவியையும் தருகின்றார்... பிறக்க உள்ள இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக் கொண்டவர்களாய்  நமது வாழ்வில் நாம் இழந்து போன 
நம்பிக்கையையும்
அன்பையும் 
அமைதியையும் 
இரக்கச் செயல்கள் மூலம் உருவாகும் மகிழ்வையும் ...

மீண்டுமாய் புதுப்பித்துக்கொண்டு நம்மைத் தேடி வருகின்ற இறைவனை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களாக வாழ இந்த கல்வாரி பலியில் பக்தியோடு இணைவோம். பாலன் இயேசுவை இதயத்தில் ஏற்போம்...

முதல் வாசக முன்னுரை :

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வரவிருக்கின்ற  அரசரின் ஆட்சி எப்படிப்பட்ட ஒரு ஆட்சியாக இருக்கும் என்பதனை எடுத்துரைக்கின்றார். அமைதியும், நீதியும் மேலோங்கி காணப்படக் கூடிய வகையில்... இருளில் வாழும் மக்கள் ஒளியைக் கண்டடையக்கூடிய வகையில் வரவிருக்கின்ற அரசரின் ஆட்சி இருக்கும் என்றுரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் பக்தியோடு செவி திறப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடி வந்துள்ள ஆண்டவர்  இயேசு கிறிஸ்துவை  நாம் இதயத்தில் ஏற்றுக்கொள்ள தீமைகளை விட்டு விலகி ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற மக்களாக வாழவேண்டும் என அழைப்பு தருகின்ற இரண்டாம் வாசகத்திற்கு கவனத்தோடு செவி கொடுப்போம். 

மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் பிறந்துள்ள பாலன் இயேசுவாகிய நீர் உமது  பாதுகாப்பில் வைத்து பராமரித்துக் கொள்ளும் ...அவர்களுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அவர்கள் முன்னெடுக்கின்ற பணிகளில் அவர்களோடு இருந்து உமது மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலை உமது பிறப்பு அவர்களுக்கு தர வேண்டுமாய் இந்நேரத்தில் இறைவா உம்மை நோக்கி வேண்டுகிறோம் .

2. பாலன் இயேசுவே! எமது நாட்டை ஆளும் தலைவர்களை உமது பாதம் அர்பணிகின்றோம். அவர்கள் தன்னலம் துறந்து பொது நலத்தோடு ஒருவர் மற்றவருக்கு தேவையான செய்து மக்களின் நலனை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.  

3. ஆற்றல் தருகின்ற ஆண்டவரே உமது பிறப்பு இன்று இந்த அகிலத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்களுக்கு நம்பிக்கையையும், எங்கள் வாழ்வில் அமைதியையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.  அன்பு இறைவா எம் பங்கில் இருக்கின்ற அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து, பராமரித்து நல்லதொரு குடும்பமாக உமது வார்த்தையின்படி வாழக்கூடிய மக்களாக எங்களை வழி நடத்திட எங்களுக்கு தேவையான ஆற்றலை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. ஏழைகளை தேடி வந்த இயேசு பாலனே உம்மை போல நாங்களும் ஏழை எளிய மக்களை தேடி செல்லவும் ... அனைவரையும் உறவுகளாக எண்ணி வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் கடந்து உம்மைப்போல அன்பால் இந்த அகலத்தில் உள்ள அனைவரையும் அன்பு செய்து வாழ எங்களுக்கு ஆற்றலைத் தர வேண்டுமாய்   இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...