துன்ப நேரங்களில் துணை அவரே...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில்
கன்னி மரியாவிடம் தோன்றிய அதே கபிரியேல் தூதர், செக்கரியாவிடமும் தோன்றினார். செக்கரியாவிடம் தோன்றிய அதே கபிரியேல் தூதர் தான் கன்னி மரியாவிடமும் தோன்றினார்.
செக்கரியாவுக்கு ஒரு மகன் பிறப்பான் என அறிவித்தது போலவே, அன்னை மரியாவுக்கும் ஒரு மகன் பிறப்பான் என அறிவித்தார்.
செக்கரியா இது எப்படி நிகழும் என கேள்வி எழுப்பினார். ஏனெனில் அவர் முதிர்ந்த வயதினர், அவரது மனைவியும் முதிர்ந்த வயதினராக இருந்தார்.
இதுபோலவே அன்னை மரியாவும் "இது எப்படி நிகழும்? நானோ கன்னி ஆயிற்றே?" என கேள்வி எழுப்பினார்.
இருவரும் ஒரே தளத்தில் இருந்தார்கள். ஆனால் கபிரியேல் தூதர் செக்கரியாவிடம், நான் சொல்வது நிறைவேறும் வரை உணர்வாய் கட்டப்படும் எனக் கூறி, அவரை மௌனியாக மாற்றினார்.
செக்கரியாவைப் போலவே கேள்வியை எழுப்பிய அன்னை மரியாவிடம், கபிரியேல் தூதர் கேள்விக்கான விளக்கத்தை கொடுக்கிறார். கடவுளின் ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னிடம் பிறக்கும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கின்ற போது, நம் உள்ளத்தில் ஒரு விதமான கேள்வி எழலாம்.
ஏன் செக்கரியா கேட்ட கேள்விக்கு அவர் மௌனியாக மாற வேண்டும்?
அன்னை மரியாவின் கேள்விக்கு ஏன் விளக்கம் தரப்பட்டது?
என்ற இரு விதமான கேள்விகள் உள்ளத்தில் எழலாம்.
இந்தக் கேள்விக்கு இறையியலாளர்கள் தருகின்ற பதில் என்னவென பார்க்கின்ற பொழுது, செக்கரியா ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யக் கூடியவராக இருந்தார். எனவே தனக்கு முன்பாக வந்து நிற்பவர் கடவுளின் தூதர் என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவர் ஐயம் கொண்டார்.
ஆனால் மரியாவின் வாழ்வு சற்று மாறுபட்டது. சமூகத்தால் பெண்கள் இரண்டாம் தரமாக பார்க்கப்பட்ட அந்தச் சூழ்நிலையில், அன்னை மரியாவின் கேள்வி எதார்த்தமானதாக இருந்தது. ஆனால் செக்கரியாவின் கேள்வி அவர் செய்த குருத்துவ பணியை கேள்விக்கு உட்படுத்தியது.
கடவுளின் ஆலயத்தில் ஆண்டவரின் தூதர் அறிவித்ததில் அவர் ஐயம் கொண்டவராய் இருந்தார்.
ஆனால் அன்னை மரியா, வீட்டில் இருந்த போது, அவருக்கு காட்சியானது தரப்பட்டது. எனவே அன்னை மரியாவின் வாழ்விலும், செக்கரியாவின் வாழ்விலும், அழைப்பு ஒரே விதத்தில் இருந்தாலும், கேள்விகள் ஒரே விதத்தில் இருந்தாலும், அன்றைய சமூகத்தில் அவர்கள் கொண்டிருந்த நிலையை குறித்து, செக்கரியாவின் கேள்விக்கு மௌனியாக மாற்றப்பட்டதும், அன்னை மரியாவின் கேள்விக்கு விளக்கம் தரப்பட்டதும், நிகழ்ந்தது எனக் குறிப்பிடுகிறார்கள்.
இன்று நாம் வாசிக்கக் கேட்ட இந்தப் பகுதி, நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடம் என்னவென சிந்திக்கின்ற பொழுது, ஆண்டவரின் சந்நிதியில் ஆண்டவரை அனுதினமும் தேடி வரக்கூடிய, நமது வாழ்வில் பல நேரங்களில், நாம் செக்கரியாவைப் போல செயல்படக் கூடியவர்களாக இருக்கிறோம்.
கடவுள் காட்டுகின்ற, இறைவார்த்தை வழியாக நமக்கு சொல்லித் தருகின்ற, வாழ்க்கை பாடத்தை, உணர்ந்து கொள்ளாதவர்களாக, செக்கரியாவைப் போல, எப்படி தன் முன் நிற்பது இறைவனின் தூதர் என்பதை அறிந்து கொள்ளாதவராக செக்கரியா கேள்வி எழுப்பினாரோ, அவரைப் போல பல நேரங்களில் அனுதினமும், ஆண்டவர் தமது வார்த்தைகள் வழியாக நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொள்ள நாம் தவறி இருக்கலாம். தவறிய நேரங்களில் எல்லாம் நினைத்துப் பார்க்கவும், மனம் மாறவும், ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
செக்கரியா மௌனியாக மாறினாலும், அவர் ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவரது ஐயம், தவிர்க்கப்பட்ட சூழ்நிலையில் அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என விவிலியம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
இந்த செக்கரியாவைப் போல, நாமும் பல நேரங்களில், நம்பிக்கையில் தளர்ச்சியுறக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்பிக்கை தளர்ச்சிக்கு அடிப்படை காரணம், வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்கள். இந்தத் துன்பங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் மீது, அதீத நம்பிக்கை கொண்டு வாழ இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
1 பேதுரு 1:6
எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
1 பேதுரு 5:10
சிறிது கால துன்பங்களுக்குப் பிறகு அவர் உங்களை சீர்படுத்தி வலுப்படுத்தி நிலை நிறுத்துவார்.
எனவே அந்த ஆண்டவர் துன்ப நேரங்களில், நமக்குத் துணையாக இருக்கிறார். நாம் இன்னல்களுக்கு மத்தியிலும்,
ஆண்டவரின் சீடர்களாக விளங்கிட, உள்ளத்தில் உறுதி ஏற்று வாழ இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக